ராமன் மற்றும் ராவணன் படைகளுக்கு இடையிலான போர் இரவு பகலாக நடக்கிறது. லட்சுமணன் இந்திரஜித்துடன் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றான்.
அக்னியஸ்திரம், வருணாஸ்திரம், பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம் என்று தெய்வீக அஸ்திரங்களை ஒவ்வொன்றாக அவன் பயன்படுத்துகின்றான்.
இந்திரஜித்திடம் அனைத்து அஸ்திரங்களுக்கும் பதில் அஸ்திரம் இருந்ததால், அவற்றைத் தகர்த்து விட்டான். இந்த அசுரனை எப்படி அழிப்பது என்று லட்சுமணனுக்குப் புரியவில்லை.
கடைசியாக ஒரு யோசனை வந்தது. இந்திராஸ்திரத்தை எடுத்து,
“தர்மாத்மா சத்யஸந்த: ச ராமோ தாசரதி: யதி |
பௌருஷே ச அப்ரதி த்வந்த்வ: ஷரைனம் ஜஹி ராவணிம்||”
என்கிற குறிப்பிட்ட மந்திரத்தைப் பயன்படுத்தி அதனை விடுகிறான்.
'தசரத புத்திரரான ராமன் சத்தியம் மற்றும் தர்மமே உருவானவர் என்பது உண்மையென்றால் இந்த அம்பு இந்திரஜித்தைக் கொல்லட்டும்' என்பதே அதன் பொருள்.
அவன் கூறிய மந்திரம் இதுவரை உலகில் யாருமே பயன்படுத்தாதது.
இந்திரஜித்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதுவரை அவன் கேட்டிராத மந்திரம் அது. அந்த மந்திரத்தைப் பொய்யாக்கக் கூடிய வழிகளை ஆராய்ந்தான். மூன்று வழிகள் அவன் மனதில் பட்டன.
1. 'என் தந்தை ராவணன் சத்தியம் மற்றும் தர்மமே உருவானவர் என்பது உண்மையென்றால், இந்த அம்பு என்னைக் கொல்லாதிருக்கட்டும்' என்று பதில் சபதம் சொல்வது.
2. 'நான் சத்தியம் மற்றும் தர்மமே உருவானவன் என்பது உண்மையென்றால், இந்த அம்பு என்னைக் கொல்லாதிருக்கட்டும்' என்று பதில் சபதம் சொல்வது.
3. 'தசரத புத்திரரான ராமன் சத்தியம் மற்றும் தர்மமே உருவானவர் என்பது பொய்யென்றால், இந்த அம்பு என்னைக் கொல்லாதிருக்கட்டும்' என பதில் சபதம் சொல்வது.
இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது, இந்த மூன்று சபதங்களும் பலனளிக்காது என்று அவனது மனசாட்சியே கூறியது. எனவே எந்தப் பதில் அஸ்திரமும் விடாமல் லட்சுமணனின் அஸ்திரத்தினால் மடிந்து விடுகிறான்.
இந்தக் கதையில் என்ன அற்புதமான தத்துவம் புதைந்திருக்கிறது.
தன் அண்ணன் ராமனின் சத்தியத்தையும் தர்மத்தையும் பணயம் வைத்து, எந்தத் தெய்வீக அஸ்திரத்தினாலும் கொல்ல முடியாத ஓர் அசுரனை லட்சுமணன் வெற்றி கொண்டான்.
ராமனின் சத்தியமும் தர்மமும் பொய்யானது என்று விரோதியான இந்திரஜித்தாலும்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. தன் தந்தை ராவணனின் வாழ்க்கை முறையும் தன் வாழ்க்கை முறையும் சத்தியத்திலும் தர்மத்திலும் இல்லையென்று இந்திரஜித்தே அறிந்திருந்தான். இதுதான் சத்தியத்தின், தர்மத்தின் மகிமை.
உலகத்தில் எந்த மந்திரமும் தந்திரமும் அஸ்திரமும் சத்தியம் என்ற ஆயுதத்தின் முன்னால் தோல்வி அடைந்துவிடும்.
சத்தியப் பாதையில் செல்கின்ற, தர்மத்தைக் கடைபிடிக்கின்ற ஒருவனது வாழ்க்கையே ஒளிமயமானது.
எப்படி ஒரு விளக்கு தானும் பிரகாசித்து, தன் சுற்றுப் புறத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, அதுபோல சத்தியம் தன் பாதையில் செல்பவனின் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்வதோடு அவனைச் சார்ந்து வாழ்கின்றவர்களின் வாழ்க்கையையும் வெற்றி பெறச் செய்யும்.