ஓர் இஸ்லாமியக் கொள்ளைக்காரன் இருந்தான். துறவிகளைப் போன்ற வேடம் அணிந்து கொண்டு கையில் ஒரு ஜபமாலையும் வைத்திருந்தான். அவன் கொள்ளையடிப்பான். கொள்ளையடித்தப் பொருளில் பாதிக்கு மேல் ஏழை எளியவர்களுக்குத் தந்துவிடுவான். அது மட்டுமின்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் நமாஸ் படித்து வந்தான். அவன் தன் கூட்டாளிகள் அனைவருக்கும் அவசியம் நமாஸ் படிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான். அவ்விதம் அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் எவனாவது நமாஸ் வெள்ளிக்கிழமை படிக்காவிட்டால் அவனை அந்தக் கூட்டத்திலிருந்தே தலைவன் வெளியேற்றிவிடுவான்.
ஒரு நாள் சில வியாபாரிகள் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்ற அதே பாதையில்தான் கொள்ளைக்காரன் தன் கூட்டாளிகளுடன் வாழ்ந்து வந்தான். திருடர்கள் வியாபாரிகளைத் தாக்கிக் கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஒரே ஒரு வியாபாரி மட்டும் கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பிவிட்டான். அவன் தன்னிடமிருந்த பணத்தைப் பாதுகாப்பாக வைக்க விரும்பிப் பணப்பையுடன் ஒரு கூடாரத்தை நோக்கி ஓடிச் சென்றான்.
வியாபாரி சென்றடைந்த கூடாரம் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனுடையதாகும். தலைவனோ அப்போது பக்கிரி வேடத்துடன் ஜபமாலையைக் கையில் வைத்துக் கொண்டு ஜபம் செய்வது போல் பாசாங்கு செய்துகொண்டிருந்தான். இதை அறியாத வியாபாரி அந்த இஸ்லாமியத் துறவியிடம், “சுவாமி! பெரிய ஆபத்து வந்துவிட்டது. திருடர்கள் எங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். தயவு செய்து இந்தப் பணமூட்டையைத் தாங்கள் வைத்திருங்கள். சிறிது நேரம் கழித்துப் பிறகு வந்து எடுத்துச் செல்கிறேன்!'' என்று வேண்டினான்.
கொள்ளைக்கூட்டத் தலைவன் ஒரு துறவியின் பெருந்தன்மையோடு, “அதோ, அந்த மூலையில் வைத்துவிட்டுப் போ!'' என்று சொன்னான்.
வியாபாரி நிம்மதியுடன் பணப்பையைத் துறவி காட்டிய மூலையில் வைத்துச் சென்றுவிட்டான்.
சிறிது நேரம் சென்றது. அதற்குள் கொள்ளைக் கூட்டத்தினர் வியாபாரிகள் அனைவருடைய பொருளையும் சுத்தமாகக் கவர்ந்து கொண்டு ஓடி மறைந்துவிட்டார்கள்.
வியாபாரி பணப்பையை எடுத்து வருவதற்காகப் புறப்பட்டான். கூடாரத்தை அடைந்தான். கூடாரத்தினுள் எட்டிப் பார்த்த வியாபாரிக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. அப்படி அவன் அங்கே என்ன காட்சியைக் கண்டான்!
கூடாரத்திற்குள் கொள்ளைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் கொள்ளையடித்து வந்திருந்த பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். வியாபாரி, 'கொள்ளைக்காரனிடமே என் பணத்தைப் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றேனே!' என்று நினைத்துத் தன் அறியாமைக்காக வருந்தினான். மெல்ல மெல்ல அந்த இடத்தை விட்டு நழுவினான்.
தலைவன் வியாபாரியை அழைத்து, “இங்கே எப்படி வந்தாய்?'' என்று கேட்டான்.
வியாபாரி நடுங்கிக்கொண்டே, "ஐயா! ஐயா! நான் பாதுகாப்பாக விட்டுச் சென்ற பணமூட்டையைத் திரும்பப் பெறுவதற்காக வந்தேன். ஆனால் நான் செய்த தவறு புரிந்துவிட்டது. எனவே திரும்பிச் செல்கிறேன்'' என்றான்.
“நில்'' என்று கட்டளையிட்ட தலைவன் வியாபாரியைப் பார்த்து, “நீ பாதுகாப்பிற்காக வைத்த பொருளை எடுத்துச் செல்! அது அங்கேயே கிடக்கிறது பார்” என்றான்.
வியாபாரிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. கழுத்தை வளைத்துத் திரும்பிப் பார்த்தான். தான் வைத்துச் சென்ற பை அதே இடத்தில் இருந்தது. மிக்க மகிழ்ச்சியோடு பணமூட்டையுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று அந்த இடத்தை விட்டு அகன்றான்.
தலைவனின் செயலைக் கண்ட மற்றக் கூட்டாளிகள் அதை விரும்பவில்லை. ஆகவே அவர்கள் தலைவனிடம், “கைக்கு வந்த பொருளை ஏன் நழுவவிட்டீர்கள்? தாங்கள் செய்தது கொஞ்சமும் சரியில்லை'' என்று கூறினர்.
தலைவன் அமைதியுடன் அவர்களைப் பார்த்து, "நீங்கள் அனைவரும் சொல்வது சரிதான்! ஆனால், அந்த வியாபாரி என்னைக் கடவுளிடம் உண்மையான பக்தி கொண்டவனாகவும், நேர்மையானவனாகவும் கருதி அல்லவா தன் பொருள்களை விட்டுச் சென்றான்? கடவுளை மகிழ்விக்கச் செய்யும் இந்தத் துறவி வேடத்திற்கான எந்த நற்குணம் தேவையோ அந்த நற்குணத்தை நான் கடைப்பிடிக்க வேண்டாமா? கடவுள் என்னை எப்போதும் நல்லெண்ணம் உடையவனாக ஆக்கட்டும்" என்று சொல்லி முடித்தான்.
இதே கொள்ளைக் கூட்டத் தலைவன் கடவுளின் அருளால் பிற்காலத்தில் 'பஜல் அயாஜ்' என்ற பிரசித்தி பெற்ற மகாத்மாவாக மாறினான். இஸ்லாமிய உலகின் போற்றுதற்குரிய அந்த ஞானியின் வாழ்க்கை பல சாதகர்களுக்கும் ஊக்கம் தருவதாக அமைந்தது.