‘சூதாட வாருங்கள்’ என்று விதுரர் வந்து பாண்டவர்களை அழைத்தார்.
அப்போது உள்ளூர மனம் மகிழ்ந்து யுதிஷ்டிரர் சகாதேவனிடம், ‘‘தம்பி உனது அபிப்பிராயம் என்ன?’’ என்று கேட்டார்.
‘‘அண்ணா! நம்மை அழைத்துப் போக யாரெல்லாம் வந்துள்ளார்கள்?’’ என்று கேட்டார் சகாதேவன்.
‘‘விதுரர் மாத்திரம்தான் வந்துள்ளார்’’ என்றார் யுதிஷ்டிரர்.
சகாதேவன் ‘‘இல்லை அண்ணா! விதுரரோடு வேறு ஒருவரும் வந்துள்ளார். வாசலில் சென்று பாருங்கள்’’ என மறுமொழி கூறினார்.
யுதிஷ்டிரர் ஆச்சரியத்துடன் அங்கே யாருமில்லாததை அறிந்து சகாதேவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.
‘‘அண்ணா! வெளியே இருப்பவர் யார் என உங்கள் கண்களுக்குத் தெரியாது. ஆனால் அவரின் சக்தியோ அளவிட முடியாதது! அதன் பெயர்தான் விதி!’’ என ஞானியான சகாதேவன் கூற, யுதிஷ்டிரருக்கு ‘திக்’ என்றது.
‘‘அண்ணா! சூதாட்டம் மூலமாக ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்க விதி தீர்மானித்துவிட்டது. நடக்கப் போவது என்னவென்று தெரிந்தாலும், நானும் உங்களுள் ஒருவன்தானே! ஆகவே வாருங்கள் புறப்படுவோம்!’’ என சகாதேவன் மறுமொழி கூறினான்.
அதன் பிறகு, சூதாட்டத்தில் தோற்று நாடு, நகரம் அனைத்தும் இழந்து மகாபாரதம் தோன்றியதை நாடே அறியும்தானே...!