துக்காராமின் பக்தியைப் பற்றியும், சிறந்த குணங்களைப் பற்றியும் கேள்வியுற்ற சத்ரபதி சிவாஜி அவரைப் பார்க்க ஆசைப்பட்டார்.
பல்லக்கு, குதிரை, யானை முதலிய பல வாகனங்களை அவரிடம் தம் சேவகர் மூலம் அனுப்பி வைத்தார்.
சேவகர் துகாராமை வணங்கி, ``சத்ரபதி சிவாஜி தங்களைத் தரிசிக்க விரும்புகிறார். தாங்கள் எந்த வாகனத்தை விரும்புகிறீர்களோ அந்த வாகனத்தில் ஏறி வரலாம்’’ என்றனர்.
துக்காராம், ``நான் சத்ரபதி சிவாஜியைப் பார்க்க வேண்டுமானால் எனக்கு ஒரு வாகனமும் தேவையில்லை. கடவுள் கொடுத்த கால் இருக்கிறது. நடந்தே வர முடியும். ஆனால் தங்கள் மன்னரிடம் சொல்லுங்கள்: நான் இங்கு விட்டலின் தொண்டில் ஈடுபட்டுள்ளேன். ஆகவே தயவு செய்து என்னை இங்கேயே இருக்கவிடச் சொல்லுங்கள்’’ என்றார்.
ராஜசேவகர்கள் திரும்பிச் சென்றனர். ஆனால் வழியில் வலுவில் வந்த லட்சுமியைத் துகாராம் இப்படிக் காலால் உதைத்து அனுப்புகிறாரே என்று பேசிக் கொண்டனர்.
துக்காராம் சொல்லியனுப்பியதைச் சிவாஜி கேட்டார். அத்தனைப் பெரிய பக்தரைத் தாம் அழைத்து வரச் சொன்னது தவறு. தாமே அவரைப் போய்ப் பார்த்திருக்க வேண்டும் என்று நினைத்து, அவரைப் பார்க்கச் சென்றார்.
பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அவர் முன்னால் வைத்து, அவர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
துக்காராம், ``மகாராஜா! தாங்கள் தர்மரட்சகர். அப்படியிருந்தும் ஏழைப் பக்தனாகிய என்னைப் பணம் என்னும் மாயையில் சிக்க விடலாமா? இது என் பக்திக்கு இடையூறாகும். தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.
பணத்தாசை சிறிதுமின்றி இருந்த துக்காராமைக் கண்டு சிவாஜி வியந்தார். பிறகு அடிக்கடி அவரைத் தரிசனம் செய்து வந்தார்.