ஓர் அரசன் தன் அமைச்சரைப் பார்த்து,
1. உண்டு, உண்டு.
2. உண்டு, கிடையாது.
3. கிடையாது, உண்டு.
4. கிடையாது, கிடையாது
இந்த நான்கு விஷயங்கள் என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்டான்.
அடுத்த நாளே அமைச்சர், தரும குணமுள்ள ஒரு பணக்காரர், ஒரு வேசி, ஒரு ஞானி, ஒரு வேடன் நான்கு ஆட்களை அரசசபையில் கொண்டு வந்து நிறுத்தினார்.
அரசன் அமைச்சரைப் பார்த்து, ``எதற்காக இவர்களை அழைத்து வந்தீர்கள்?’’ என்று கேட்டான்.
அதற்கு அமைச்சர், ``நேற்று நீங்கள் என்னைக் கேட்ட கேள்விக்குப் பதில்தான் இவர்கள்” என்றார்.
1. இதோ இருக்கிறாரே பணக்காரர், இவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர், தர்மசீலர். அதனால் இவருக்கு இங்கும் சுகம் உண்டு, அங்கும் சுகம் உண்டு. (உண்டு, உண்டு)
2. இந்த வேசி பாவகாரியங்களைச் செய்து கொண்டிருக்கிறாள். அதனால் இவளுக்கு இங்கே சுகம் உண்டு, ஆனால் பரலோகத்தில் கிடையாது. (உண்டு, கிடையாது)
3. இதோ இந்த ஞானிக்கு இந்த உலகில் சுகம் கிடையாது, ஆனால் மறு உலகில் சுகம் உண்டு. (கிடையாது, உண்டு)
4. இதோ இந்த வேடன் எப்பொழுதும் பாவகாரியங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். இவனுக்கு இந்த உலகிலும் சுகம் கிடையாது, மறு உலகிலும் சுகம் கிடையாது. (கிடையாது, கிடையாது)