ஒரு காட்டில் மரப் பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கும்.
ஒருநாள் திடீரென்று, “இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?” என்று சந்தேகம் வந்தது.
பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகுக்கு இன்று எனக்கு உணவு கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்தது.
அந்த கழுகு தான் அமர்ந்து தியானம் செய்யும் பாறைமீது நின்று, " இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?" என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
உடனே விண்ணிலிருந்து ஒரு குரல், "உனக்கு இன்று உணவு உண்டு."என்ற பதில் கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சியுடன் இன்று இரை தேடும் வேலை இல்லை எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்து இருந்தது.
நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறைதியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று மாலையும் போயிற்று. இரவு வந்து விட்டது. "இனி நம் இருப்பிடம் செல்ல வேண்டியதுதான். நம்மை இறைவனே ஏமாற்றி விட்டாரே" என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
அப்போது, "என்ன குழந்தாய், சாப்பிட்டாயா?" என்று இறைவனின் குரல் கேட்டது.
கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.
"இறைவா, நீ எனக்கு இன்று உணவு உண்டு என்று கூறிய பிறகுதானே நம்பிக்கையோடு நான் தியானத்தில் அமர்ந்தேன்.
ஆனால் இன்று என்னைப் பட்டினி போட்டு விட்டாயே! உன் கணக்கு தப்பா, என் நம்பிக்கை தப்பா?" என்று அழுது கொண்டே கேட்டது.
இறைவன் சிரித்தார்.
"குழந்தாய், சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது."
கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது.
அதைப் பார்த்த கழுகு இறைவனிடம், "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?"என்றது.
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்து விட்டது நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்தி விட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சி கூடச் செய்யாமல் உணவு எப்படிக்கிட்டும்? அவரவர் உணவுக்குத் தகக உழைப்பை அவரவரே செய்ய வேண்டும் அப்போதுதான் உணவு இருப்பதும் தெரியும் கிடைக்கவும் செய்யும். கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒருவேளை உணவு கூட உழைக்காமல் உண்ணக் கூடாது. இதை நீமட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும். இனியாவது புரிந்து கொள்." என்று கூறிய இறைவன் கழுகுக்கு ஆசி வழங்கி மறைந்தார்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கிற்று.