சுவாமி ராமதீர்த்தர் ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில் சென்றுகொண்டிருந்தார்.
சான்பிரான்ஸிஸ்கோ துறைமுகத்திற்குக் கப்பல் வந்ததும் எல்லாரும் கப்பலை விட்டு இறங்கினார்கள். ஆனால் ராமதீர்த்தர் கப்பலை விட்டு இறங்க மனமில்லதவர்போல் கப்பலின் மேல்தளத்திலேயே நின்று கொண்டிருந்தார்.
அதைக் கண்ட ஓர் அமெரிக்கன் அவரைப் பார்த்து, ``உங்கள் பொருட்கள் எங்கே? ஏன் கப்பலை விட்டு இறங்கவில்லை?’’ என்று கேட்டான்.
சுவாமி ராமதீர்த்தர், ``என் உடலில் இருக்கும் ஆடைதான் என் பொருள். அதைத் தவிர எனக்கு வேறு ஒரு பொருளும் கிடையாது’’ என்றார்.
``ஆமாம், உங்கள் பணத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள்?’’
``நான் ஒரு பணமும் வைத்துக்கொள்ளவில்லை’’
``அப்படியானால் உங்கள் சாப்பாடு?’’
``உலகம் முழுவதும் எனக்குச் சொந்தம். அப்படியிருக்க என் சாப்பாட்டைப்பற்றி என்ன கவலை? யாராவது கொடுத்தால் சாப்பிடுவது; இல்லாவிட்டால் பேசாமலிருப்பது’’
``அமெரிக்காவில் உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா?’’
``ஒரே ஒருவர் இருக்கிறார்’’
``யார் அவர்?’’
``நீங்கள்தான்’’ என்று சொல்லி ராமதீர்த்தர் அந்த அமெரிக்கனின் தோள் மீது அன்பாகக் கையை வைத்தார்.
ராமதீர்த்தரின் பற்றற்ற தன்மையைக் கண்டு அந்த அமெரிக்கன் வியந்தான்.