ஒரு சாது ஒரு நகரத்துக்கு வெளியில் வசித்து வந்தார்.
அவர் பிச்சை வாங்குவதற்காக அவர் அடிக்கடி நகரத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது.
நகரத்தில் இருந்த ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண் அவரைத் தன் வசப்படுத்த முயன்று தோல்வியடைந்தாள்.
அந்தக் கோபத்தில் அவள் அவரைப் பார்த்து, ``நீ ஆணா, பெண்ணா?’’ என்று கேட்டாள்.
அதற்கு அவர், ``இதற்கு ஒரு நாள் பதில் சொல்கிறேன்’’ என்று சொன்னார்.
இப்படி வெகு காலம் நடந்து வந்தது.
ஒரு நாள் பாலியல் தொழில் செய்யும் அந்தப் பெண் வீட்டிற்கு ஓர் ஆள் வந்து, ``உன்னைச் சாது அழைக்கிறார்’’ என்றான்.
அவள் சாதுவின் குடிசைக்குச் சென்றாள். அங்கு அவர் சாகும் தறுவாயில் இருந்தார்.
அவர் அவளைப் பார்த்து, ``நீ என்னை வெகு நாளாக ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய். அதற்கு இப்பொழுது பதில் சொல்கிறேன். நான் ஆண்தான்’’ என்றார்.
அதற்கு வேசி, ``இந்தப் பதிலை முன்பே சொல்லியிருக்கலாமே’’ என்றாள்.
சாது, ``உருவத்தைக் கண்டு மட்டும் யாரையும் ஆணா, பெண்ணா என்று சொல்லிவிடமுடியாது. உலகத்தின் மாயையை வென்றவன்தான் ஆண். அதற்குக் கீழ்ப்படிந்தவர்கள் எல்லோரும் பெண்களே. உயிரோடிருக்கும் வரை யாரும் மாயையை வென்றுவிட்டதாக மார் தட்டிக் கொள்ள முடியாது. நானோ இப்போது சாகும் தறுவாயில் இருக்கிறேன். அதனால்தான் தைரியமாக நான் ஆண் என்று சொன்னேன்’’ என்றார்.