``மகனே! ஏன் உன்னுடைய ஆடையில் ரத்தக்கறை படிந்திருக்கிறது? எங்காவது விழுந்து காயம் பட்டதா?’’ என்று தாய் அன்போடு கேட்டாள்.
``கோடாலியினால் என் காலை வெட்டிப் பார்த்தேன்’’ என்று நாமு பதிலளித்தான்.
``நீ ஒரு மூடன். எவனாவது தன் காலைத் தானே வெட்டிக் கொள்வானா? உனக்குப் பித்துப் பிடித்துவிட்டதா என்ன?’’ என்று தாய் கோபத்தோடு கேட்டுக்கொண்டே மகனின் ஆடையை நீக்கிப் பார்த்தாள்.
காலில் பெரிய காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால், நாமுவோ வலி சிறிதும் இல்லாதவனைப் போன்று உணர்ச்சியற்று நின்றிருந்தான்.
``என்ன வேலை செய்தாய், மகனே! காயம் இன்னும் சிறிது அதிகமாகப்பட்டிருந்தால் காலையே துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்குமே. ஏன் அவ்வாறு செய்தாய்?’’ என்றாள் அன்னை.
``அம்மா! அன்று பூவரசு மரத்தை வெட்டி அதன் மேல்மட்டையைப் பெயர்த்தேன். அதற்கு வலி ஏற்படுமோ என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது. அதைத் தெரிந்து கொள்வதற்காக என் காலை வெட்டிப் பார்த்தேன். உண்மையை உணர்ந்தேன்’’ என்று விடையளித்தான் மகன்.
பூவரசு பட்டையைக் கொண்டுவருமாறு தாம் மகனை ஏவியது தாயின் நினைவிற்கு வந்தது. அவள் விம்மி விம்மி அழுதாள். நாமுவை அன்போடு அணைத்து ``மகனே! பிற்காலத்தில் நீ ஓர் உயர்ந்த சாதுவாக விளங்குவாய். இது திண்ணம்’’ என்று கூறிப் பின், ``மரங்களிடமும் ஏனைய உயிரினங்களிடமும் நம்மிடம் இருக்கும் ஜீவன்தான் இருக்கிறது. நமக்கு ஏற்படும் உணர்ச்சிகள் அவற்றிற்கும் ஏற்படும். பட்டையைப் பெயர்த்தால் மரத்திற்குத் துன்பம் உண்டாகும்’’ என்று கூறினாள்.
அந்த நாமுதான் பிற்காலத்தில் மகான் நாமதேவர் என அழைக்கப்பட்டார்.