ஓர் ஊரில் அரசி ஒருத்தி இருந்தாள். அவளுக்குத் தினமும் படுக்கையறையைச் சுத்தம் செய்து, படுக்கை விரிப்பதற்கு ஒரு பணிப்பெண் இருந்தாள்.
கோடைநாட்களில் அரசி ஆற்றங்கரையிலிருந்த அரண்மனை ஒன்றில் வந்து தங்குவது வழக்கம். பகலில் உணவுக்குப் பின் சிறிது நேரம் அந்த ராணி படுத்து ஓய்வு எடுப்பது வழக்கம்.
ஒரு நாள் அந்தப் பணிப்பெண் ராணி படுப்பதற்காகக் கட்டிலில் படுக்கையை விரித்தாள்.
கடுமையான வெயிலினாலும், பசியினாலும், உழைப்பினாலும் பணிப்பெண் மிகவும் களைத்துப் போயிருந்தாள்.
அருகில் பெருகும் ஆற்றின் குளுமையையும், தோட்டத்தில் உள்ள மலர்களின் மணத்தையும் சேர்த்து மிருதுவான தென்றல் காற்று அந்த அறையில் வீசிற்று. அந்தக் காற்று, பணிப்பெண்ணின் சோர்வுக்கு மிகவும் இதமாக இருந்தது.
ஒரு நாளாவது ராணியின் படுக்கைச் சுகத்தைத் தான் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது.
அன்று அந்தப் படுக்கையில் படுத்தாள். என்றும் அறியாத இன்பத்தை உணர்ந்த அந்தப் பணிப்பெண் தன்னையும் மறந்து அயர்ந்து துாங்கிவிட்டாள்.
ராணி வந்து பணிப்பெண் துாங்கும் காட்சியைப் பார்த்தாள். அவளுக்குச் சொல்ல முடியாத கோபம் வந்தது.
ஆகவே அவள் ஆத்திரத்தோடு பணிப்பெண்ணுக்கு ஓர் அடி கொடுத்தாள்.
பணிப்பெண் கண்விழித்துப் பார்த்து நிலைமையை உணர்ந்தாள். தன் தவற்றை உணர்ந்து மெளனமானாள். அரசியோ கோபம் தணியாமல் அவளைத் திட்டிக் கடுமையாக அடிக்கவும் செய்தாள்.
பணிப்பெண் முதலில் அழுதாள். பிறகு திடீரென்று சிரித்தாள்.
பணிப்பெண் சிரித்ததும் அரசியின் கோபம் மேலும் அதிகமாயிற்று.
சிரிப்பின் காரணம் என்ன என்று அரசி வினவினாள்.
அதற்குப் பணிப்பெண் கைகளைக் கூப்பி, ``அரசி! என்னை மன்னிக்க வேண்டும். ஒரே ஒரு நாள் சில விநாடிகள் இந்தக் கெட்ட படுக்கையில் படுத்ததினால் இவ்வளவு வசைமொழிகளையும் அடிகளையும் பெற்றேன். இந்தப் பாழாய்ப்போன படுக்கையில் ஆயுள் முழுவதும் துாங்கும் நீங்கள் எவ்வளவு அதிகமான திட்டுக்களையும் அடிகளையும் பெற வேண்டுமோ! ஈசனே அறிவார். நீங்கள் இந்தப் பிறவியில் பெறாவிட்டாலும் வட்டியும் முதலுமாக அடுத்த பிறவியில் இவற்றைப் பெற்றே ஆகவேண்டும். இதை அறியாமல் என்னைத் துன்புறுத்தும் உங்கள் அறியாமையை எண்ணினேன். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது’’ என்று கூறினாள்.
பணிப்பெண் சொன்னதைக் கேட்டதும் அரசிக்கு, கடவுளின் பார்வையில் தானும் மற்றவர்களைப் போன்று ஒரு ஜீவன்தான் என்ற உண்மை விளங்கியது. தான் ஓர் அரசி என்ற அகம்பாவத்தையும் அவள் அன்றே கைவிட்டாள்.