இராமதாசர் இராமாயணம் எழுதினார். எழுதியதைத் தமது சீடர்களுக்குப் படித்து விளக்கிக் கொண்டிருந்தார்.
அனுமாரும் நாள்தோறும் அதைக் கேட்க யாருக்கும் தெரியாமல் வந்து உட்காருவார்.
இராமதாசர், ``அனுமார் அசோகவனத்தை அடைந்தார். அங்கு வெள்ளை மலர்களைக் கண்டார்’’ என்று எழுதியிருந்தார்.
இதைக் கேட்டதும் அங்கே அனுமார் உடனே தோன்றினார். ``நான் அசோகவனத்தில் வெள்ளை மலர்களைப் பாரக்கவில்லை. நான் பார்த்தவை சிவப்புமலர்கள். நீங்கள் எழுதியிருப்பது பிழை. அதைத் திருத்துங்கள்’’ என்று இராமதாசரிடம் சொன்னார்.
ஆனால் இராமதாசர், ``நான் எழுதியிருப்பது சரியே. நீங்கள் வெள்ளை மலர்களைத்தான் பார்த்தீர்கள்’’ என்றார்.
அனுமார், ``போனவன் நான்! அப்படியிருக்க நான் சொல்லுவது பொய்யா?’’ என்று கேட்டார்.
கடைசியில் இந்த வழக்கு இராமரிடம் போயிற்று. அவர் தீர்ப்புச் சொன்னார் - ``பூக்கள் வெள்ளையே! ஆனால் அனுமானது கண்கள் கோபத்தினால் சிவந்திருந்த காரணத்தால் அவை அவருக்குச் சிவப்பாய்த் தோன்றின’’ என்று விளக்கமும் தந்தார்.
நாம் உலகை எந்த நோக்கத்தில் பார்க்கிறோமோ, அப்படியே அது நமக்குத் தோன்றும் என்பதே இதன் கருத்து.