நல்ல குளிர்காலம். பகவான் புத்தர் வைசாலி நகரை நோக்கி நடந்துகொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர்.
புத்தர் திரும்பிப் பார்த்தார். எல்லோரும் பெரிய பெரிய மூட்டைகளைத் தலையிலும் இடுப்பிலும் கக்கத்திலும் வைத்துச் சுமந்து வந்து கொண்டிருந்தனர். அத்தனையும் அவர்களுடைய ஆடைகள்.
எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வந்த துறவியருக்கு இத்தனை ஆடைகள் அவசியம்தானா? என்று புத்தர் ஒரு கணம் யோசித்தார்.
பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல நடந்தார்.
வைசாலியிலுள்ள மடத்தை அன்று மாலை போய்ச் சேர்ந்தார்கள்.
இரவின் முதல் ஜாமம் ஆரம்பித்திருந்தது. வழக்கமாக மடத்திற்குள் படுத்து உறங்கும் புத்தர் அன்றைக்கு வெளியே வந்து ஒரு துணியைத் தரையில் விரித்துப் படுத்தார்.
நல்ல குளிர் அடித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிருக்குத் தாம் அணிந்திருந்த ஆடை போதும் என்று அவருக்குத் தோன்றவில்லை. ஆகவே அவர் தம் மாற்று ஆடை ஒன்றைக் கொண்டு போர்த்திக் கொண்டார்.
முதல் ஜாமம் முடிந்து, இரண்டாவது ஜாமம் ஆரம்பமாயிற்று. அப்போது குளிர் பின்னும் அதிகரித்தது. ஆகவே இன்னோர் ஆடையைக் கொண்டு தம்மைப் போர்த்திக் கொண்டார்.
இரண்டாவது ஜாமம் முடிந்து, மூன்றாவது ஜாமம் ஆரம்பித்தது. அப்பொழுது குளிர் பின்னும் அதிகரித்தது. ஆகவே புத்தர் மூன்றாவது மாற்று உடையைக் கொண்டு தம்மைப் போர்த்திக்கொண்டார்.
அதற்குப் பிறகு குளிர் சிறிது சிறிதாகக் குறைய, பொழுது விடிந்தது.
அடுத்த நாள் காலை, புத்தர் தம் சிஷ்யர்களைப் பார்த்து, ``குளிரிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மூன்று மாற்று ஆடைகள் இருந்தால் போதும். அதற்கு மேல் வைத்துக்கொள்வது தவறு’’ என்று சொன்னார்.
தேவைக்கு அதிகமாக எதுவாயிருப்பினும் அது சுமையே!