முன்பொரு காலத்தில் ஒரு சந்நியாசி வாழ்ந்து வந்தார். அவரது உடைமைப் பொருள்களாவன 1. சமய நுால், 2. மண்ணெண்ணெய் விளக்கு, 3. காலையில் கூவி எழுப்பச் சேவல், 4. பிரயாணத்திற்கு உதவக் கழுதை. இவற்றுடன் சந்நியாசி ஒரு கிராமத்தைச் சென்றடைந்தார்.
அங்கு இரவு தங்குவதற்கு யாரும் இடம் தரவில்லை.
அந்தச் சாது கடவுள் நம்பிக்கை மிகக் கொண்டவர். தமக்கு நேர்ந்த இந்தத் துன்பமும் தமது நன்மைக்குக் கடவுள் செய்தது எனக் கருதி அருகிலுள்ள காட்டிற்குச் சென்றார்.
அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டார். கழுதையை மரத்தில் கட்டினார். சேவலைப் பக்கத்தில் இருக்கச் செய்தார். பின்பு அன்றாட வழக்கத்தின்படி விளக்கேற்றி, புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார்.
அப்போது பெருங்காற்று விளக்கை அணைத்துவிட்டது. அதைத் திரும்ப ஏற்ற இயலவில்லை.
அவர், `கடவுள் இன்று உணவும் உறைவிடமும் கிட்டாதபடி செய்தார். இப்போது படிப்பதற்கும் தடை செய்திருக்கிறார். இவை யாவும் பகவான் என் மீது கொண்டுள்ள கிருபை காரணமாகச் செய்யப்பட்டவையாகும்’ என்று நினைத்துக் கொண்டார்.
சிறிது நேரம் நிச்சப்தமாக இருந்தது. கழுதையின் வாசனையைப் பின்பற்றி வந்த புலி ஒன்று அதை இழுத்துச் சென்றது.
ஓர் ஓநாய் சேவலைக் கொன்றது.
காலையில் கூவி எழுப்பச் சேவல் இல்லை. சுமந்து செல்லக் கழுதை இல்லை. எங்கே சென்றாலும் கால் நடையாகவே செல்ல வேண்டும். எனினும் சாதுவிற்குக் கடவுள் நம்பிக்கை எள்ளளவும் குறையவே இல்லை. கருணையுள்ள கடவுள் தமது நன்மைக்கே எல்லாம் செய்வதாக மனப்பூர்வமாக உணர்ந்தார்.
மறுநாள் விடியற்காலையில் சாது பிச்சைக்காக அந்தக் கிராமத்திற்குச் சென்றார்.
கிராமம் முழுவதும் எரிந்து சாம்பலாகக் காட்சி தந்தது. இரவு கொள்ளைக் கூட்டத்தினர் மக்களைக் கொன்று, பொருள்களைச் சூறையாடி, வீடுகளுக்குத் தீ வைத்திருந்தனர்.
கிராமத்தார் சாதுவை உபசரித்து இரவு தங்க இடம் தந்திருந்தால் அவரும் அழிந்திருப்பார். கானகத்தில் இவரது விளக்கு அணையாமல் இருந்தால், விளக்கொளியில் இவரைக் கண்ட கொள்ளைக் கூட்டத்தினர் இவரையும் கொன்றிருப்பார்கள். இரவில் கழுதை கத்தினாலும், சேவல் கூவினாலும் சாதுவின் உயிருக்கு ஆபத்தே. எனவே இறைவன், விளக்கை அணைத்து, கழுதையையும் சேவலையும் கொன்று, சந்நியாசியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இறைவனது கருணையை எண்ணிச் சாது வியந்தார்.