திருவள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார் தன் கணவருக்கு உணவு படைக்கும் போது, ஒரு கிண்ணத்தில் நீரும், ஓர் ஊசியையும் உணவுத் தட்டுக்கு அருகில் வைக்குமாறு வள்ளுவர் கூறுவார்.
அம்மையாரும் அவ்வாறே வைத்து வந்தார். ஆனால், வள்ளுவர் அவற்றை ஒரு நாளும் பயன்படுத்தவில்லை. அம்மையாரும் தன் கணவர் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கிறார் என்று அவரைக் கேட்கவில்லை.
வாசுகி அம்மையாரின் இறுதிக் காலம் நெருங்கியது. தான் மறைவதற்கு முன், கணவரின் செயலுக்கு விளக்கம் கேட்டார்.
''ஐயனே, உண்ணும் போது நீரும், ஊசியையும் வைக்கச் சொல்வீர்கள். ஆனால் அவற்றை ஒருபோதும் தாங்கள் பயன்படுத்தவில்லையே! என் மீது ஏதாவது பிழையுள்ளதோ?'' என்று கேட்டார்.
வாசுகியின் கேள்வியால் வள்ளுவரின் விழிகளில் கண்ணீர்.
வள்ளுவர், ''மங்கையர் திலகமே, உன் மேல் பிழை ஏதுமில்லை. நீ எனக்கு உணவு பரிமாறும் போது, ஏதாவது சோற்றுப் பருக்கை கீழே விழுந்தால், அதை ஊசியில் எடுத்து நீரில் கழுவித் தட்டில் உள்ள சாதத்தோடு சேர்த்துக் கொள்ளவே, அவ்வாறு வைக்கச் சொன்னேன். ஆனால், வாழ்நாளில் ஒருமுறை கூட நீ பரிமாறும் போது ஒரு பருக்கை கூட விழுந்ததில்லை. அதனால் நீரையும், ஊசியையும் பயன்படுத்தவில்லை'' என்றார்.
வாசுகி அம்மையாரின் உள்ளம் அமைதியில் ஆழ்ந்தது.