19 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் கோடீஸ்வர சேட் ஒருவர் வாழ்ந்து வந்தார். எளிமையாக வாழ்ந்தாலும் சொத்துக்களை எப்படி அதிகரிக்கலாம் என்பதிலும் குறியாக இருந்தார்.
ஒரு நாள் சேட்ஜி தேர்ந்த ஜோதிடர் ஒருவரைச் சந்தித்தார். அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்து மகிழ்ந்தார்.
ஜோதிடர் சேட்ஜியின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ''சேட்ஜி, உங்களுக்கு ஜாதகத்தில் ப்ரஹஸ்பதி உச்சத்தில் இருப்பதால் சகல சௌபாக்கியங்களுடனும், புகழுடனும் வாழ்வீர்கள். தினமும் சாதுக்கள், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். அதனால் உங்களது வம்சத்தில் ஐந்து தலைமுறை வரை குறைவற்ற செல்வம் இருக்கும்'' என்று கூறிச் சென்றார்.
உடனே சேட்ஜி அன்னதானம் செய்யத் தொடங்கினார். ஆனாலும் ஜோதிடர் கூறியதை எண்ணி ஓர் உறுத்தலும், அதாவது தன் வம்சத்தில் 'ஐந்து தலைமுறைக்கு என்றுதானே கூறினார்; 'ஆறாவது தலைமுறையின் கதி என்ன ஆகுமோ' என வருந்தினார்.
சேட்ஜிக்கு, தேவையற்ற சிந்தனைகளால் தூக்கம் கெட்டு, உடலும் நலிந்து வந்தது. குடும்பத்தினர் எவ்வளவோ கூறியும் சேட்ஜி சமாதானம் அடையவில்லை.
ஒரு நாள் ஓர் ஏழை அந்தணர் பஜனைப் பாடல்களைப் பாடியபடி சென்று கொண்டிருந்தார். சேட்ஜியும் அவரை அழைத்துத் தன்னிடமிருந்து உணவைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.
அந்தணர் பணிவுடன், ''ஐயா, எனக்கு இப்போதைக்கு உணவு கிடைத்துவிட்டது. நாளைக்கு வேண்டியதை யாராவது தரலாம். யாரும் எதுவும் தராவிட்டால் நான் இங்கு வருகிறேன்'' என்று கூறினார்.
அந்தணரின் மனநிறைவைக் கண்டு சேட்ஜி, ''மகாத்மாவே, தங்களுக்கு நான் ஏதாவது தந்தாக வேண்டும். ஒரு மூட்டை அரிசியையாவது தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறேன், அது தங்களுக்குப் பல நாட்களுக்கு உதவும்'' என்றார் பக்தியுடன்.
உடனே அந்தணர், ''பிரபுவே, பொருளைச் சேர்த்து வைப்பது பாவத்திற்குக் காரணமாகலாம். அதிலும் அந்தணர்கள் அவ்வாறு சேர்த்து வைக்கக் கூடாது. இறைவன் நமக்குத் தினப்படி படி அளக்கிறார். அவரே நாளைக்கு வேண்டியதையும் பார்த்துக் கொள்வார்'' என்றார்.
ஏழை அந்தணர் கூறியதைக் கேட்ட சேட்ஜி வியப்புடன், 'இந்த அந்தணருக்கு நாளையைப் பற்றிய கவலையே இல்லை. வரும் பொருளையும் ஏற்க மறுத்து, இறைவனிடம் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையால் நிறைவுடனும் வாழ்கிறார். நானோ எதற்கு இவ்வளவு கேவலமாக என் ஆறாவது தலைமுறையினருக்குச் செல்வம் சேர்ப்பது குறித்துக் கவலைப்பட வேண்டும்' என நாணினார்.
மறுநாள் முதல் அதிக அளவில் தான தருமங்கள் செய்து நிறைவுடனும், மகிழ்வுடனும் 'ஆறாவது தலைமுறை கதி என்ன?' என்ற சிந்தனையும் நீங்கி ஆனந்தமாக வாழ்ந்தார்.