1''ஏன், இன்று இப்படிச் சோகமாக இருக்கிறீர்கள்? உங்களை நான் இப்படி பார்த்ததே இல்லையே?'' கணவனிடம் மனைவி கேட்டாள்.
''நானும் எவ்வளவோ என்னைச் சமாதானப்படுத்திக் கொள்கிறேன். ஆனால், என் மக்களே என்னை நம்பாமல் விமர்சிக்கும் போது எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா?'' என்று பெருமூச்சு விட்டபடி கூறினார் கணவர்.
''உங்கள் கவலையை என்னிடம் கூறக்கூடாதா?'' மனைவி கேட்டாள்.
''இன்று என் பிரிய மகன்களுள் ஒருவன் என்னிடம் கொட்டிய வார்த்தைகள் தேள் கொட்டியதற்குச் சமம். அவன் என்னிடம் எவ்வளவு விசுவாசமாக இருந்தான். பிறந்ததிலிருந்து நான் அவனை என் நேரடிப் பார்வையிலேயே வைத்துக் காப்பாற்றி வருகிறேன்''
''அதை ஊரே அறியுமே!''
''பிறக்கப் போகும் அவனது பையனுக்குக்கூட நான் பல நல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்'' கணவனின் குரல் கம்மியது.
''கவலைப்படாதீர்கள். அவனது குடும்பத்திற்கும் சுற்றத்தாருக்கும் நீங்கள் செய்ததை அவன் மறக்க மாட்டான்''
''நீ தாய். இப்படித்தான் அவனது தவறை மறந்து பேசுவாய். ஆனால் இன்று அவன் என் மனம் புண்படும்படி எப்படிப் பேசினான் தெரியுமா? அதுவும் கோயிலில் உரக்கக் கத்தி என்னைக் கலங்க வைத்துவிட்டான்''
''அப்படியா? அவனா இப்படி! அவன் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவனாயிற்றே?''
''அப்படித்தான் இருந்தான். விதிவசத்தால் திடீரென அவனது குடும்பத்தில் ஒரு பிரச்னை வந்தது. அதைப் பற்றி அவன் என்னிடம் கூறுவதற்கு முன்பே, அவனுக்கு நான் தைரியம் தந்தேன். என்னிடம் மதிப்புள்ள சிலரிடம் பேசி, அவனுக்குப் பண உதவியும் செய்தேன்''
''மருத்துவ உதவியும் செய்திருப்பீர்களே?''
''ஆமாம், ஆனால் இன்று அவன் அதையெல்லாம் மறந்து 'என்னை நம்புவது பித்துக்குளித்தனம்; யாரும் இனி என்னிடம் போய் ஏமாற வேண்டாம்' என்று கோயிலில் பலர் முன்னிலையில் கத்திப் பேசினான்''
''அட ராமா, இவன் ஏன் இப்படி மாறிவிட்டான்! கோவில் காரியம் என்றால் இவன்தானே முன் நிற்பான். ஒரு பிரச்னை வந்ததும் உங்களையே தூற்றிவிட்டானே, கலிகாலம் இது'' என்று மனைவி வாயைப் பொத்தியபடி உரைத்தாள்.
கணவன் கண் மூடி அமர்ந்திருந்தார்.
''விடுங்கள் , அவன் ஏதோ குழப்பத்தில் இப்படிப் பேசிவிட்டான். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்''
''என் கவலை இவன் என்னை இப்படி மரியாதையின்றிப் பேசியதற்காக அல்ல. இவனைப் பார்த்து இன்னும் சிலர் என் மீது நம்பிக்கை இழப்பதும், ஏற்கனவே என் மீது பற்றுள்ளவர்களின் மனங்களை இவனது பேச்சு சஞ்சலப்படுத்துமே என்பதும்தான் என் கவலை.
''உண்மைதான் சுவாமி, ஒருவனுக்கு நம்பிக்கை கிடைப்பது பெரிய விஷயம். அதோடு, நாம்தான் நம் குழந்தைகளின் முதல் நலம் விரும்பிகள் என்பதெல்லாம் புரிவதற்குப் பக்குவம் வர வேண்டும், அதற்கான நேரம் வர வேண்டும்''
கணவன் அமைதியானார்.
''இன்று இதை மறந்துவிடுங்கள். இவன் மாதிரி நம் பிள்ளைகளே நம் மனம் புண்படும்படிப் பேசுவதும், பிறகு தவறை உணர்ந்து நம் காலில் வந்து விழுந்து அரற்றுவதும் இன்று நேற்றா நடக்கிறது?''
கணவன் புன்னகைத்து, ''ஆமாம், அநாதி காலமாக இப்படித்தானே நம் வாழ்க்கை செல்கிறது! நம் பிள்ளைகள் நம்மைப் புறக்கணித்தாலும், மறந்தாலும் நாம் நம் கடமையைச் செய்து கொண்டு இருப்போம்!''
''சரி சுவாமி, அவனது புலம்பல் என் காதுகளிலும் விழுகிறது. வாருங்கள்! அவனைக் கஷ்டத்திலிருந்து காப்பாற்றப் போகலாம்''
''சரி, ரிஷப வாகனம் தயாரா? என்று பார்''
இவ்வாறு கூறிவிட்டு கைலாயத்திலிருந்து சிவனும் பார்வதியும் புறப்பட்டார்கள், பூலோகத்தில் பக்தன் ஒருவனைக் காப்பாற்ற...!