ஜிம் கடவுளை நம்பாதவன். ஆனால் திறமையான நீச்சல் வீரன். ஒரு பெரும் நீச்சல் பயிற்சிக்கூடத்தில் அவன் தினமும் கடுமையான பயிற்சி செய்வான். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவனது ஆசை.
ஜிம்மிற்கு ஒரு நண்பன். அவன் ஜிம்மை ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்வான்.
ஆனால் ஜிம் இதுவரை ஒருமுறை கூட சர்ச்சுக்குச் சென்றதில்லை. அதைப் பற்றி அவன் கவலைப்படவுமில்லை. சுயமுயற்சியிலும் பகுத்தறிவுத் திறமையிலும் அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு.
ஒரு நாள் இரவில் ஜிம் அதிக நேரம் பயிற்சி செய்யத் தீர்மானித்து நீச்சல்குள வளாகத்திற்குச் சென்றான். அவனைத் தவிர அங்கு வேறு யாருமில்லை.
அது ஒரு ‘இன்டோர்’ நீச்சல் குளம். மேலே இருந்த கண்ணாடிக் கூரை வழியாக முழுநிலவின் ஒளி வந்து கொண்டிருந்தது. மிக உயரத்தில், மூன்றாவது நிலையில் இருந்து குதிக்கும் பலகையின் நுனியில் சென்று நின்ற ஜிம் கைகளைப் பக்கவாட்டில் நீட்டியவாறு நின்றான்.
நிலவொளியில் எதிரில் இருந்த சுவரில் விழுந்த தனது நிழலைக் கண்டு ஜிம் ஒரு கணத்திற்குத் திகைத்துப் போனான். கைகளை நீட்டி அவன் நின்றிருந்த நிலையில் அவனது நிழல் ஒரு சிலுவைக் குறியைப்போல் எதிர்ச்சுவரில் காணப்பட்டது.
ஜிம்மின் மனதில் அப்போது ஒரு பொறி தட்டியது. தன் நண்பன் எவ்வளவு எடுத்துக் கூறியும் தான் கடவுள் பற்றி ஒருமுறைகூட நினைத்ததே இல்லையே! அவனுக்காக ஒருமுறையாவது இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தான் ஜிம்.
அத்தீர்மானம் ஜிம்மின் மனதில் உதிக்க அவன் சுவற்றில் கண்ட சிலுவை போன்ற நிழல்கூடக் காரணமாக இருந்திருக்கலாம்!
உடனே ஜிம் அந்தப் பலகையின் மீதே, கையைக் கூப்பியவாறு முட்டிபோட்டு அமர்ந்தான். தன் மனதில் தோன்றிய எண்ணங்களைப் பிரார்த்தனையாகச் சொன்னான்:
‘‘இறைவா, இனிமேல் நீ என்னிடம் வா. என்னைச் சரியான வழியில் நடத்தி, என் எல்லா முயற்சிகளிலும் வெற்றியை வழங்கு’’
ஜிம் பிரார்த்தனையை முழுவதுமாக முடிக்கக்கூட இல்லை. அப்போது, அந்த நீச்சல் குளத்தைத் துப்புரவு செய்யும் தொழிலாளி ஒருவர் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். அவர் விளக்கு ஸ்விட்ச் இருக்கும் இடத்திற்குச் சென்று ஸ்விட்சைப் போட்டதும், ஒளி வெள்ளம் அந்த வளாகம் முழுவதும் பரவியது. கீழே, யார் வந்து விளக்கைப் போட்டது என்று பார்த்தபோதுதான் ஜிம் கவனித்தான்...
ஆ..., அந்த நீச்சல் குளத்தைச் சுத்தம் செய்வதற்காக எல்லா நீரும் காலி செய்து வடிக்கப்பட்டிருந்தது. ஒரு சொட்டு நீர்கூட அதிலில்லை!
அவனைக் குதிக்கவிடாமல் காத்தது யார்?