முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர், தனது குடிமக்களை நன்றாகக் கவனித்து கொண்டு வந்தார். அந்நாட்டில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதி நிலவியது. ஆனால், காலப்போக்கில், அற்பமான பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும் வரத் தொடங்கின; அரசன் அவற்றைத் தீர்க்க வேண்டியிருந்தது.
அவரின் வயது அதிகரித்து கொண்டிருந்தது. மேலும் பிரச்சனைகளை கையாள கூடிய வயதை தனது மகன் எட்டியிருக்கவில்லை என்பதை உணர்ந்தார். இந்த எண்ணம் சிக்கலை ஏற்படுத்தியது; அவர் பதட்டம் அடைந்து தூக்கத்தையும் இழந்தார்.
தனக்குப் பிறகு என்ன நடக்கும் என்று அவர் எப்போதும் கவலையில் ஆழ்ந்திருந்தார். இப்பிரச்சனைக்குத் தீர்வைக் காண நினைத்து அவர் தனது குல குருவிடம் சென்று, “குருதேவா, நாளுக்கு நாள் நான் பலவீனமடைந்து வருகிறேன், ராஜ்ஜியத்தை முன் போல சிறப்பாக ஆள முடிவதில்லை. என் மகனோ சிறு குழந்தை, அவனிடமும் அரசை தற்போது ஒப்படைக்க முடியாது. இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
குல குரு சற்று சிந்தித்து விட்டு, “நிலத்தை ஆளக்கூடிய ஒருவரை உங்களால் கண்டுபிடிக்க இயலாவிட்டால், ராஜ்ஜியத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு பரிந்துரைக்கிறேன். என்னால் அதைக் கையாள முடியும்” என்று ஆலோசனை கூறினார்.
அரசர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், “கண்டிப்பாக, நான் முழுமனதுடன் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
குரு தனது கமண்டலிலிருந்து தண்ணீரை எடுத்து அரசர் கையில் ஊற்றினார். உடனே அரசர் தனது கையிலிருந்த தண்ணீரை குல குருவின் கைகளுக்கு ஊற்றினார். இது அரசாளும் உரிமையின் பரிமாற்றத்தைக் குறிக்கும்.
அரசர் அங்கிருந்து செல்லத் தயாரானார். “எங்கே செல்கிறீர்கள்?” என்று குல குரு கேட்டார். அதற்கு அரசர் “நான் இந்த ராஜ்ஜியத்தை விட்டு வெகுதூரம் சென்று ஒரு சாமானியனாக வாழப் போகிறேன்.” என்றார்.
குலகுரு “பிழைப்பிற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.
அரசர் “எனக்கு வரும் எந்த வாய்ப்பையும், வேலையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.” என்றார்.
அதற்கு குலகுரு, “எந்த வேலையும் செய்ய நீங்கள் தயாராக இருந்தால், என்னிடம் வந்து வேலை செய்யுங்களேன். என்னிடம் ஒரு பெரிய ராஜ்ஜியம் உள்ளது. ஆனால் அதை என்னால் தனித்து நடத்த முடியாது. ஆட்சி புரிய துணையாக எனக்கு நல்ல அனுபவமுள்ள ஒருவர் தேவை; நீங்கள் அவ்வேலைக்கு மிகவும் பொருத்தமானவர் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.
அரசரும் அதற்கு “நிச்சயமாக நான் அந்த வேலையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று ஒப்புதலளித்தார்.
உடனே குலகுரு “நல்லது, இந்த நிமிடத்திலிருந்து என் சார்பாக ராஜ்ஜியத்தை ஆளத் தொடங்குங்கள். எதுவுமே உங்களுடையது அல்ல, மாறாக நீங்கள் ஊதியத்தில் அமர்த்தப்பட்டுள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள” என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
அரசர் அந்த வேலையை ஏற்றுக் கொண்டு தன் குருவின் சார்பாக அரசை ஆளத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு குரு அரண்மனைக்கு வந்து அரசரிடம், “இப்போது எப்படி இருக்கிறீர்கள்? இன்னும் பதற்றம் ஏதேனும் இருக்கிறதா? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?” என்று விசாரித்தார்.
அரசர் மகிழ்ச்சியுடன், “மிகவும் சந்தோஷமாக உள்ளேன் குருதேவா. நான் என் கடமையை மட்டுமே செய்வதனால், நாள் முழுவதும் ஆட்சியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு நிம்மதியாக தூங்குகிறேன். எனக்கென்று பொறுப்போ சுமையோ ஏதும் இல்லை” என்று பதில் கூறினார்.
இறைவனை நமது வாழ்வின் ஒரே முதலாளியாகக் கருதி நமது வேலையை செய்தால், நமது பாரங்கள் எல்லாம் நீங்கும்.