ஒரு நாள் ஒரு குரு வயல்வெளியில் நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது கலங்கிய தோற்றத்துடன் ஒரு இளைஞன் அவரை அணுகினான்.
குரு, “இவ்வளவு அற்புதமான தினத்தன்று சோகமாக இருப்பது கடினம்” என்று கூறினார்.
அதற்கு இளைஞன், “அப்படியா? நான் எதையும் கவனிக்கவில்லை” என்று சொல்லி சுற்றிலும் பார்த்தான். பரவி இருந்த நிலப்பரப்பை நோட்டம் விட்டான். கண்கள் பார்த்ததே தவிர அவனுடைய மனம் வேறு எங்கோ இருந்தது. எதுவும் பதியவில்லை.
குரு அவனை உற்றுக் கவனித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினார். பிறகு, அவனிடம், “விருப்பப்பட்டால் நீயும் என்னுடன் நடக்கலாம்” என்றார்.
குரு ஒரு சிறிய அமைதியான நீர்நிலையின் விளிம்பிற்கு நடந்து சென்றார். அந்தக் குளத்தைச் சுற்றி அத்தி மரங்கள் இருந்தன. அதன் பொன்னிற இலைகள் குளத்தில் விழ இருந்தன. இளைஞனை அழைத்து கீழே அமரும்படி குரு கூறினார். அவன் நிலத்தை உற்று நோக்கி தனக்கான ஒரு இடத்தை சுத்தம் செய்து கொண்டான்.
பிறகு குரு, “இப்பொழுது ஒரு சிறிய கல்லைக் கண்டெடு” என்று அறிவுறுத்தினார்.
இளைஞன் “என்ன?” என்று கேட்ட போது, குரு “கல். தயவு செய்து ஒரு சிறு கல்லை கண்டெடுத்து குளத்திற்குள் வீசு” என்றார். அவன் சுற்றிலும் தேடி ஒரு சிறிய கூழாங்கல்லை எடுத்து, அவனால் முடிந்தவரை தண்ணீருக்குள் தூரமாக வீசினான்.
குரு, “உனக்கு என்ன தெரிகிறது?” என்றார்.
சிற்றலைகளை ஒன்றன்பின் ஒன்றாக என்னால் பார்க்க முடிகிறது என்று அவன் கூறினான். “சிற்றலைகள் எங்கிருந்து வருகின்றன?” என்று குரு கேட்டார்.
அவன், “நான் தூக்கி எறிந்த கூழாங்ககல்லில் இருந்து வருகிறது” என்றான்.
குரு “உன் கையை தண்ணீருக்குள் விட்டு சிற்றலைகளை தடுக்க முயற்சி செய்”, என்றார்.
அவன் அர்த்தம் புரியாமல் தன் கைகளை சிற்றலைகளுக்கு அருகே விட்டு நிறுத்த முயற்சி செய்தான். ஆனால் சிற்றலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அதிகமாகிக் கொண்டே தான் இருந்தது. இப்பொழுது அவன் மிகவும் குழப்பம் அடைந்தான். என்ன நடக்கிறது என்று புரியாமல், குரு சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்று மிகவும் குழப்பம் அடைந்தான். புரியாத புதிராய் குருவின் பதிலுக்காக அமைதியாகக் காத்திருந்தான்.
குரு, “சிற்றலைகளை உன் கைகளால் தடுத்து நிறுத்த முடிந்ததா” என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், “நிச்சயமாக தடுத்து நிறுத்த முடியவில்லை, மாறாக என்னால் நிறைய சிற்றலைகளே உருவாகின” என்றான்.
குரு, “ஆரம்பத்திலேயே கூழாங்கல் தண்ணீருக்குள் விழுவதை தடுத்து இருந்தால் என்ன? என்று கேட்டு, அழகாகப் புன்னகைத்தார்.
மேலும் குரு, “அடுத்த முறை உன் வாழ்க்கையில் பிரச்சனை என்ற கல் வருவதற்கு முன்னாலேயே, அதைப் பிடித்து எறிந்து விடு. நீ செய்து முடித்த காரியத்தை திருத்தி அமைப்பதில் நேரத்தை வீணாக்காதே. மாறாக, செயலைத் தொடங்குவதற்கு முன்பே நன்கு ஆராய்ந்து செயல்படு. உன் வாழ்க்கையை வாழ்வதற்கு நீ பொறுப்பேற்றுக் கொள். உனக்காக வேறு எவரும் அதை செய்ய இயலாது” என்றார்.