எது விலை உயர்ந்த கல்?
தன் நாட்டிற்கு வந்த துறவி ஒருவரிடம் அந்நாட்டு அரசன் அவனுடைய பெருமையைக் காட்ட நினைத்தான். அவனிடமிருந்த பளபளக்கும் வைரக் கல் ஒன்றைக் காட்டி, " துறவியாரே , இந்த வைரக்கல்லின் மதிப்பு பல லட்சம் பொற்காசுகள். இந்தக்கல் என்னிடம் மட்டும்தான் இருக்கிறது. பக்கத்து நாட்டு அரசர்களிடம் கூட இது போன்ற வைரக்கல் இல்லை " என்றான்.
"அரசே! இதன் மதிப்பு பல லட்சம் பொற்காசுகள் என்றீர். ஒரு நாட்டின் மதிப்பிற்கு ஈடாக இதைச் சொல்லலாம் என்றீர். இவ்வளவு மதிப்புடைய இந்தக் கல் ஆண்டிற்கு எவ்வளவு வருமானம் தருகிறது? "
துறவி இப்படி அறியாமையில் இருக்கிறாரே என்று நினைத்த அரசன், " துறவியாரே , இதனால் எந்த வருவாயுமில்லை. இதைப் பாதுகாப்பதற்காக நிறைய காவலர்கள் வேறு வைத்திருக்கிறேன். ஆண்டுக்கு ஆயிரம் பொற்காசுகளுக்கு மேல் இதற்கு செலவாகிறது." என்றான்.
"அரசே இதைவிட விலை உயர்ந்த கல் ஒன்றை உம் நாட்டிலேயே வரும் வழியில் பார்த்தேன். எனனுடன் வந்தால் அதைக் காட்டுகிறேன் " என்றார் துறவி.
துறவியுடன் அரசனும் புறப்பட்டான்.
நகருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த சிறு குடிசைக்குள் துறவி நுழைந்தார்.
அங்கே கிழவி ஒருத்தி மாவாட்டும் ஆட்டுரலில் மாவு ஆட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அந்த ஆட்டுரலைக் காட்டிய துறவி, "அரசே! உம் வைரக் கல்லைக் காப்பாற்ற நீர் செலவு செய்கிறீர். இந்த மாவாட்டும் ஆட்டுரல் கல் இடைவிடாது உழைத்து இந்தக் குடும்பத்தையேக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தக்கல்லை விடவா உங்கள் வைரக்கல் உயர்ந்தது?" என்றார்.
அரசனின் தற்பெருமை நீங்கியது
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.