மகானைச் சந்தித்த ஒருவர், “நீங்கள் எப்பொழுதும் இறைவனை வழிபடுகிறீர்கள். அதை இறைவன் கேட்கிறார். அதன் பின்பு உதவி செய்கிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டார்.
“அதில் என்ன சந்தேகம். இறைவன் நமக்கு உதவி செய்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்றார் அவர்.
“பத்தாயிரம் ரூபாய் இருந்தால் என் கஷ்டம் தீரும். நீங்கள் இறைவனிடம் வேண்டி எனக்குக் கிடைக்கச் செய்யுங்கள்”
“நான் உங்களை மன்னரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீங்கள் உடனே அவர் பையில் கையை விட்டு பணத்தை எடுப்பீர்களா?”
“அது எப்படி முடியும்?”
“சரி நீங்கள் என்ன செய்தால் அவர் பையிலிருந்து பணம் எடுக்க உங்களுக்கு உரிமை கிடைக்கும்?”
“முதலில் நான் அவரிடம் நெருங்கிப் பழக வேண்டும். பிறகுதான் அவரது பையிலிருந்து பணம் எடுக்க முடியும்.”
“ம்... அதே முறையைத்தான் இறைவனிடமும் பின்பற்ற வேண்டும். அவரை வணங்கி வணங்கி நெருக்கம் பெற வேண்டும். அதன் பிறகுதான் எதையும் கேட்கும் உரிமை கிடைக்கும்” என்றார் மகான்.