ஸ்ரீமறைஞான சம்பந்த சிவாசாரியார் வேதங்களை எல்லாவற்றையும் நன்றாக ஓதி உணர்ந்தவர். அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி உமாபதிசிவம் என்பவர், "என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று வேண்டினார்.
மறைஞான சம்பந்தரும் அவ்விதமே உமாபதிசிவத்தைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.
சீடரின் பக்குவத்தை குரு சோதித்து அறிந்து கொள்ள விரும்பினார்.
ஒரு நாள் மறைஞான சம்பந்தர் செங்குந்தர் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவர் தமது பசியைப் போக்கக் கருதினார்.
அதனால் அவர், செங்குந்த நெசவாளர் பாவில் செலுத்திய கூழினை வார்க்கும்படி கேட்டார்.
அவர்களும் அப்படியே வார்த்தனர்.
மறைஞான சம்பந்தர் கூழைத் தம் இரு கையால் ஏற்று, “சிவப்பிரசாதம், சிவப்பிரசாதம்!'' என்று சொல்லிக் கொண்டே பருகினார். இவர் கைகளிலிருந்து ஒழுகும் எச்சிலான கூழினை உமாபதிசிவம் தம் கைகளில் ஏற்று, “குருப்பிரசாதம், குருப்பிரசாதம்!” என்று கூறியபடியே பருகினார்.
அதைக் கண்டு தம் சீடருக்குப் பக்குவம் வந்துவிட்டது என்று குரு மகிழ்ந்தார்; சிவ ஞானபோதப் பொருளை உபதேசித்தார்.
தம் குருவின் அருளால் சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் எட்டுச் சாத்திரங்களை இயற்றி உமாபதிசிவம் சிறந்த ஞானாசிரியராகத் திகழ்ந்தார்.
குருவருள் ஒன்றினால் எல்லா ஆன்மிக நன்மைகளும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.