தஞ்சைப் பெரிய கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜன் அதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
'எப்படி வேலை நடக்கிறது?' என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல மாறுவேடம் பூண்டார், கோயில் பணி நடக்கும் இடத்திற்கு வந்தார்.
அவரை அரசர் என்று யாருமே அறிந்து கொள்ளவில்லை.
அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலரும் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள்.
அங்கிருந்த மேற்பார்வையாளனோ, “என்ன எல்லோரும் ஏமாற்றுகிறீர்களா? இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான்.
அவன் அருகில் வந்த பேரரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக்கூடாதா?” என்று கேட்டார்.
“நான் மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான்அவன்.
"அப்படியா?” என்ற ராஜராஜசோழன் வேலையாட்களுடன் தானும் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார். ஒருவழியாகப் பாறை மேலே ஏற்றப்பட்டது.
பெருஞ்செல்வரைப் போலகாட்சி அளித்த அவர், வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்ததைக் கண்டு மேற்பார்வையாளன் வியப்படைந்தான்.
மறுநாள் பேரரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளுக்கு ஓர் ஓலை வந்தது. அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லையானால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பு. நேற்று வேலை செய்ததைப் போல அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது.
இதைப் பார்த்த மேற்பார்வையாளனின் ஆணவம் ஒழிந்தது. பிறகு அவன், மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து உழைத்து அவர்களுக்கு ஊக்கம் தந்தான்.