பேராசிரியர் ஒருவர், ஒரு சமயம் 'நான்-இன்' என்ற ஜப்பானியக் குருவிடம் பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
அதனால் பேராசிரியர் ஒரு நாள் குருவைத் தேடிச் சென்றார்.
அந்த ஜப்பானியக் குரு ஒரு குடிசையில் இருந்தார்.
இந்தப் பேராசிரியர் ரொம்ப தூரம் நடந்து அந்தக் குடிசைக்கு வந்து சேர்ந்தார்.
அவரிடம் குரு, “நீங்கள் மிகவும் களைப்பாகக் காணப்படுகிறீர்கள்... கொஞ்சம் இளைப்பாருங்கள்... உங்களுக்குத் தேநீர் தயார் செய்கிறேன்..... ஒரு கோப்பைத் தேநீர் சாப்பிட்ட பிறகு நாம் கலந்துரையாடலாம்!” என்றார்.
இவ்விதம் குரு சொல்லிவிட்டு தேநீர் தயாரிப்பதற்காக வெந்நீர் கொதிக்க வைத்தார். அதே சமயம் அவர் பேராசிரியரையும் லேசாகக் கவனித்தார்.
ஒரு பக்கம் தண்ணீர் கொதிக்கிறது... இன்னொரு பக்கம் பேராசிரியரும் கொதித்துக் கொண்டிருக்கிறார்.
தேநீர் பாத்திரத்திலிருந்தும் சப்தம் வந்து கொண்டிருக்கிறது... பேராசிரியரிடமிருந்தும் சப்தம் வந்து கொண்டிருக்கிறது!
ஏனென்றால் அவர், 'இந்த குருவிடம் என்ன கேட்பது... எப்படிக் கேட்பது..... எங்கே இருந்து ஆரம்பிப்பது....' என்றெல்லாம் தனக்குத்தானே கேட்டுக் கொண்டு தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தார்.
அந்தப் பக்கம் தேநீரும் தயாராகி விட்டது.
ஜப்பானிய குரு சிரித்துக் கொண்டே இதையெல்லாம் கவனித்தார்.
அதன்பிறகு அவர் ஒரு கோப்பையில் தேநீரை ஊற்ற ஆரம்பித்தார்.
பேராசிரியர் கோப்பையைக் கவனித்தபடியே இருந்தார். கோப்பை நிரம்பி வழிய ஆரம்பித்தது.
அதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் பேராசிரியர், “நிறுத்துங்கள்... கோப்பையில் இனிமேல் கொஞ்சம் கூட தேநீர் ஊற்ற முடியாது .... உங்களுக்கு என்ன பைத்தியமா?” என்று கத்தினார்.
இப்போது அந்தக் குரு சொல்கிறார்: “இதே நிலையில்தான் இப்போது நீங்களும் இருக்கிறீர்கள்... நீங்களும் உங்கள் சொந்தக் கருத்துக்களாலும், எண்ணங்கள் என்ற கோட்டைகளாலும் நிறைந்திருக்கிறீர்கள்... நீங்கள் உங்கள் கோப்பையைக் காலி செய்யாத வரையில் நான் உங்களுக்குப் புதிதாக என்ன கொடுத்துவிட முடியும்?" என்றார் குரு.
'கோப்பை நிரம்பிவிட்டது. அது இனிமேல் கொள்ளாது' என்ற விழிப்புணர்வு அந்தப் பேராசிரியருக்கு இருந்தது.
ஆனால் தன்னைப் பற்றிய விழிப்புணர்வு அவருக்கு இல்லை!
அவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்கள், கோட்பாடுகள், தத்துவங்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டுப் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறார்.
அதனால் ஜப்பானிய குரு, “நீங்கள் ஏற்கெனவே அதிகம் அறிந்திருக்கிறீர்கள்... அதற்கு மேலும் நான் உங்களுக்குப் புதிதாக எதையும் கொடுக்க முடியாது!” என்று கூறினார்.
மேலும் அவர், “என்னைத் தேடி வருவதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். வீணாகப் பிரயாணம் செய்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் கோப்பையைக் கொஞ்சம் காலியாக வைத்திருந்தால் நான் அதில் கொஞ்சமாவது ஊற்ற முடியும்!” என்று தெரிவித்தார்.
'கோப்பையைக் காலி செய்' என்றால், 'மனதைக் காலி செய்!' என்பது பொருள். ஏனென்றால் அங்கே 'நான்' என்ற ஆணவம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. ஆணவம் அங்கு இருக்கும் வரையில் வேறு எதையும் அங்கு கொண்டு போய்ச் சேர்க்க முடியாது.
அதனால்தான், “கோப்பையைக் காலி செய்..... இல்லாவிட்டால் அதை வீசி எரிந்து விடு” என்று ஒரு பெரியவர் கூறியிருக்கிறார்.
“கோப்பையை எரிந்துவிடு” என்று சொன்னால் அதற்கு, “நான் வெறும் புறமாக (எண்ணங்களுக்கு வெளியே) இருக்கிறேன் என்ற உணர்வு கூட இல்லாமல் இருக்க வேண்டும்” என்பதுதான் பொருள்.
ஒரு தடவை சீடன் போதிதர்மரிடம் - வந்து, “ஐயா! நீங்கள் என்னை வெறுமையாக இருக்கச் சொன்னீர்கள்... நான் இப்போது வெறுமையானவன் ஆகிவிட்டேன்... நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு போதிதர்மர் ஒரு கம்பை எடுத்து அவன் தலையில் அடித்தபடியே, “போய் அந்த வெற்றுத்தன்மையையும் எரிந்துவிட்டு வா!” என்றார்.
“நான் காலியாக இருக்கிறேன்' என்றால், அதிலேயும் 'நான்' இருக்கிறது இல்லையா... அந்த ‘நான்' காலியாக இருக்க முடியாது. ஆகவே நீ வெறுமையானவன் என்று சொல்ல முடியாது!” என்பது அவருடைய கருத்து.