கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. அங்கு கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி கடற்படையின் தளபதி.
அவர் தொலைதூரத்தில் ஒரு கப்பலைப் பார்த்தார். அது இவருடைய கப்பலை நோக்கி வருவதைப் போன்று ஒரே நேர்க்கோட்டில் இருந்தது.
அதைப் புரிந்து கொண்ட கடற்படையின் தளபதி அந்தக் கப்பலுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில் அவர், ''நீங்கள் என் கப்பலை நோக்கி வந்து கொண்டிருக்கிறீர்கள். இதனால் நம் இருவரின் கப்பல்களும் மோதிக்கொள்ளும். அதை நாம் இப்போது தவிர்த்தாக வேண்டும். எனவே நீங்கள் சற்று ஒதுங்கிச் செல்லுங்கள்' என்று செய்தி அனுப்பினார்.
அதற்குப் பதிலாகத் தூரத்தில் இருந்த கப்பலிலிருந்து ''நான் ஒதுங்கிச் செல்ல முடியாது. நீங்கள் தான் ஒதுங்கிச் செல்ல வேண்டும்'' என்று பதில் வந்தது.
கடற்படையின் தளபதி, ''நான் ஒதுங்கிச் செல்ல மாட்டேன். நீங்கள்தான் ஒதுங்கிச் செல்ல வேண்டும். இது நான் உங்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை'' என்று பதில் செய்தி அனுப்பினார்.
மீண்டும் அவருக்கு, ''நான் ஒதுங்கிச் செல்வது என்பது இயலாத காரியம். அது ஒருபோதும் நடைபெறாது. உங்கள் கப்பலுக்கு நீங்கள் நன்மை செய்ய விரும்பினால் நீங்கள் ஒதுங்கிச் செல்லுங்கள்'' என்று பதில் வந்தது.
இந்தச் செய்தி கிடைத்ததும் கடற்படை தளபதிக்குச் சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. அவர் கோபத்துடன், ''நீங்கள் என் கப்பலுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லத்தான் வேண்டும். இந்த என் எச்சரிக்கையை நீங்கள் பொருட்படுத்தாவிட்டால், உங்கள் கப்பலை நான் வெடிகுண்டு போட்டுச் சிதறும்படிச் செய்வேன்' என்று பதில் அனுப்பினார்.
அதற்கு ஒரு பதில் வந்தது. அதில், ''நான் நீங்கள் நினைப்பதுபோல் இது ஒரு கப்பல் அல்ல. இது கலங்கரை விளக்கம். இது எப்படி ஒதுங்கிச் செல்ல முடியும்? இது இருந்த இடத்தில்தான் இருக்க முடியும்'' என்று பதில் வந்தது.
ஆம், கடற்படை தளபதி நிலையில்தான் சமுதாயத்தில் மக்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கை வசதிக்கேற்ப விழுமியங்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் விழுமியங்கள் என்பவை மேற்கூறிய கதையில் சொல்லப்பட்ட கலங்கரை விளக்கம் போன்றவை.
காலங்காலமாக நமது நாட்டில் இருந்து வரும் உன்னதமான விழுமியங்கள் நம் முன்னோர் நமக்கு அளித்துச் சென்ற செல்வங்கள் ஆகும். அந்த உன்னத விழுமியங்களை நாம் மாற்றக்கூடாது. மாறாக, நாம்தான் அந்த உன்னத விழுமியங்களுக்காக நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்.