ஒரு முறை பூமியில் மனிதர்கள் செய்யும் யாகங்களில் அளிக்கப்படும் ஹவிஸ் என்ற உணவைப் பெற வாயு, அக்னி, இந்திரன், யமன், வருணன், சூரியன் ஆகிய தேவர்கள் ஒன்றாக பூமிக்கு வந்ததால் பூமியால் தாங்க முடியவில்லை. மக்களும் தவித்தனர்.
ஆகவே, தேவர்களில் ஒருவர் மட்டும் பிரதிநிதியாக பூமிக்கு வந்து ஹவிஸைப் பெற்று, அந்தந்த தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று யக்ஞ புருஷன் முடிவு செய்தார். ஆனால் எந்த தேவனும் முன்வரவில்லை.
இறுதியில் அக்னியிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காலம் காலமாக அக்னி ஹவிஸைப் பெற்று தேவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்துச் சோர்வடைந்தார். பிறகு அவர் இனி தான் அவ்வாறு செய்யமுடியாது எனக்கூறி கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அதனால்தான் கடலில் வடவாக்னி என்ற நெருப்பு உள்ளது.
கடலை வற்றச்செய்து அக்னியை வெளிக் கொணர்ந்தபோது அக்னி ஒரு மரத்தில் போய் மறைந்து கொண்டார்.
தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பிரம்மா அந்த மரத்தின் அடியிலும் விஷ்ணு நடுவிலும் சிவன் உச்சியிலும் அமர்ந்து அக்னியை வற்புறுத்தினர். அக்னியும் அந்த மும்மூர்த்திகளிடம் தனக்கு வேண்டும் வரங்களைப் பெற்று ஹவிஸை எடுத்துச் செல்லச் சம்மதித்தார்.
“அக்னி மறைந்து கொண்ட அந்த மரம் மரங்களில் சிறந்த அரச மரம் என்ற பெயர் பெற்றது. அந்த மரத்தின் அரணிக் கட்டைகளைக் கடைந்தால் நெருப்பு வரும். அக்னிக்கு மூப்பே இராது. அக்னி எப்போதும் சுத்தமாக இருக்கும். உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சாட்சியாக இருக்கும்'' என்று அவர்கள் வரமளித்தனர்.
இவ்வாறு அரச மரம், மரங்களின் அரசனாக விளங்குகிறது.