கங்கைக் கரையில் அமர்ந்து கொண்டு ஜனக மஹாராஜா உரத்த குரலில், ''அஹம் ப்ரஹ்மாஸ்மி'' என்று கூவிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அஷ்டாவக்ர முனிவர் அதைப் பார்த்துவிட்டு, ''இந்த தண்டம் என்னுடையது. இந்தக் கமண்டலம் என்னுடையது'' என்று உரக்கக் கூறிக் கொண்டேயிருந்தார்.
இது ஜனகருக்கு எரிச்சலூட்டியது.
அந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் சென்று அங்கும், ''அஹம் ப்ரஹ்மாஸ்மி'' (நான் பிரம்மமாக இருக்கிறேன்) என்று கூறலானார்.
கொஞ்சநேரம்தான். அங்கும் அஷ்டாவக்ரர் வந்து அதே மாதிரி, ''இந்த தண்டம் என்னுடையது...'' என்று கத்த ஆரம்பித்தார்.
ஜனகருக்குப் பொறுக்க முடியவில்லை.
உடனே, ''ஐயா! மஹாமுனியே! யாரும் மறுக்கவில்லை. இந்தக் கமண்டலும் தண்டமும் உங்களுடையதுதான். அதை இப்படி உரக்கச் சொல்லிக் கொள்வது அவசியமா என்ன?'' என்றார்.
உடனே முனிவரும், ''எனது அன்பார்ந்த ஜனகா, அது உனக்கும் பொருந்துமல்லவா? நீ பிரம்மம் என்பதை யாரும் மறுக்கவில்லையே? பின் ஏன், நான் பிரம்மம் என்று கூறிக் கொண்டிருக்கிறாய்! நீ அதுவாக இரு!'' என்று உபதேசித்தார்.