இலங்கையை அடைவதற்காகக் கடலின் மீது பாலம் கட்ட வேண்டியிருந்தது. இதற்காக, தரையில் கையூன்றி, அதன்மீது தலை சாய்த்துத் தவம் இருந்தார். மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் உருண்டோடின. கடலரசன் தோன்றவில்லை. ராமரின் கண்கள் சிவந்து போகின்றன. அருகில் நின்ற லட்சுமணனிடம் தம்முடைய ஆதங்கத்தைக் கொட்டுகிறார்:
''பார் தம்பி, மென்மையும் பொறுமையும் இவ்வுலகில் ஒரு பொருட்டில்லை. இவற்றையெல்லாம் பலவீனம் என்று எண்ணிவிடுகிறார்கள். தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவரையும், ஆணவம் கொண்டவரையும், தனக்குத் தானே விளம்பரம் செய்து கொள்பவரையும், பிறருக்குத் தண்டனை வழங்கக் காத்திருப்பவரையும் உலகம் பெரிதாக நினைக்கிறது. இன்று காட்டுகிறேன். முதலைகள் நிறைந்த இக்கடலின் நிலையைக் காட்டுகிறேன். என் பொறுமையை பலவீனம் என்று எண்ணும் இக்கடலை இன்று வற்றச் செய்கிறேன்''
இவ்வாறு கூறிவிட்டு, தம்முடைய கோதண்டத்தை எடுத்து நாணேற்றினார் ராமர். அம்புகளை வைத்து இலக்கெடுத்தார்.
நெருப்புப் பிழம்புகள் என ஜ்வலித்த அவ்வம்புகள், கடலின் ஆழத்தைத் துளைத்தன. காற்று சுழன்றடிக்க, உயரமான பேரலைகள் கடல் பரப்பை நிரப்ப, சங்குகளும் சிப்பிகளும் எம்பிக் குதிக்க, கனல் அம்புகளின் புகை எங்கும் நிறைய.... கடலின் தவிப்பைக் கண்ட லட்சுமணன் ஓடிவந்து ராமரின் கரங்களைப் பற்றினான்.
லட்சுமணனின் கைகளை உதறிவிட்டு, பிரம்மாஸ்திரத்தைக் கோதண்டத்தில் ராமர் பதிக்க... கைகளைக் குவித்தபடியே கடலரசன் வந்து பணிந்தான்.