துரோணர் சிறுவயதில் ஓர் ஆசிரியரிடம் குருகுலவாசம் செய்து வித்தைகளைக் கற்றார். அப்போது அவரோடு துருபதன் என்ற அரசகுமாரனும் அதே ஆசிரியரிடம் சீடனாக இருந்தான்.
துரோணரும் துருபதனும் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் ஒரு கணங் கூடப் பிரிந்து இருக்க மாட்டார்கள். இறுதியில், அவர்களுடைய குருகுலவாசம் முடிந்தது. இருவரும் பிரிய வேண்டிய தருணம் வந்தது.
"நீயோஅரசகுமாரன். நான் ஏழைப் பிராம்மணன். என்னை இனி நீ மறந்து விடுவாய் அல்லவா, துருபதா?"
''என்ன துரோணா அப்படிக் கேட்டுவிட்டாய்? நான்அரசனானால், அப்போது நீ வா. தெரிந்துகொள்வாய். என்நாட்டில் பாதியை உனக்குத் தந்துவிடுவேன்" என்று கூறினான் துருபதன்.
அவனுடைய அன்பைப் பாராட்டியபடி துரோணர் தம் வீட்டிற்குச் சென்று விட்டார்.
ஆண்டுகள் பல கழிந்தன.
துரோணருக்குத் திருமணம் நடந்து அவருக்கு மகனும் பிறந்துவிட்டான். அசுவத்தாமன் என்று அவனுக்குப் பெயர் வைத்தார் துரோணர்.
சிறுவன் வளர வளர அவனுக்குப் பால் வாங்கக் கூடத் துரோணரிடம் பணம் இல்லை. அந்த ஏழைமை நிலையை மாற்ற அவர் துருபதனைச் சென்று பார்த்துவரத் தீர்மானித்தார். துருபதன் அப்போது அரசனாகிவிட்டிருந்தான். அவனைப் பார்த்து இரண்டு பசுமாடுகள் வாங்கி வர வேண்டும் என்று துரோணர் எண்ணினார்.
துரோணர் அரசவையை அடைந்த போது துருபதன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். துரோணரைஅவன் அடையாளம் கண்டுகொண்டான்.
ஆனால், கந்தையுடை உடுத்திய ஒருவனைத் தன் நண்பன் என்று சபைநடுவே ஒப்புக்கொள்ள அவன் வெட்கினான். ஆகவே அவன் அவரைப் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை!
"துருபதா!" அழைத்தவர் துரோணர்.
“யார் நீ? என் பெயரைச் சொல்லி அழைக்க உனக்கு என்ன ஆணவம்!''
துரோணர் திடுக்கிட்டார்: 'துருபதனாஇப்படிப் பேசுவது!' இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.
"மன்னியுங்கள், அரசே! குருகுலவாசத்துப் பழக்கம், தவறி வந்துவிட்டது. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். இளவயதில்நாம் நண்பர்களாக இருந்தபோது பாதி நாட்டையே தருகிறேன் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால், எனக்கு வேண்டியவை இரண்டு பசுமாடுகள் மட்டுமே. தருவீர்களா?"
“அடச்சீ! இந்த ஏழைப் பிச்சைக்காரனை யார் உள்ளே விட்டது? இவனை வெளியே தள்ளுங்கள். குருகுலவாசமாம், நான் சொன்னேனாம்!" என்று கத்தினான் துருபதன்.
அவமானத்தால் வெட்கிப்போய், துரோணர்வெளியே வந்தார். கால் போன போக்கில் அவர் நடந்து போய்க்கொண்டிருந்தபோதுதான் பாண்டவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆசிரியரானது.
தம் கதையைக் கூறிய அவர், கண்களில் துளித்த நீரைத் துடைத்துக் கொண்டார்.
''அந்தத் துருபதனை வென்று அவனை இழுத்து வர வேண்டும். அதுதான் நான் கேட்கும் குருதட்சிணை.''
அர்ச்சுனன் ஆசிரியரின் கண்ணீரைக் கண்டதும் துடித்துப் போனான். தான் தனியே சென்று துருபதனைக் கொண்டு வருவதாகச் சூளுரைத்தான். தன் குதிரையில் தாவி ஏறிக்கொண்டு சிட்டாகப் பறந்தான் அர்ச்சுனன்.
துருபதன் அலட்சியமாகச் சிரித்தான். ஒரு சிறுவன் தன்னைப் போருக்கு அழைப்பதைக் கேட்டதும் அவனுக்கு முதலில் வேடிக்கையாகத்தான் இருந்தது. ஆனால், அந்தச் சிறுவன் துரோணரால் அனுப்பப்பட்டவன் என்பதைக் கேட்டதும் அவன் சிரிப்பு மறைந்தது.
துரோணர் மிகவும் கெட்டிக்காரர் என்பதை அவன் அறிவான். அவரிடம் கல்வி பயிலும் பாண்டவர்களின் புகழை, அதிலும் அர்ச்சுனனின் வில்வலிமையின் சிறப்பை, அவன் கேள்வியுற்றிருந்தான்.
துவந்த யுத்தத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை மறுக்க முடியாதபடியால், போரிட அவன் ஒப்புக்கொண்டான். தேரில் ஏறிக்கொண்டு அவன் ஊரெல்லைக்கு ஆயுதங்களுடன் சென்றான். அங்கு அவனை எதிர்நோக்கிக் காத்திருந்த அர்ச்சுனன் தன் வில்லை வளைத்து ஒலியெழுப்பினான். மனத்திற்குள் துரோணரை வணங்கினான்.
துவந்த யுத்தம் தொடங்கியது. துவந்த யுத்தம் என்றால், யாருடைய துணையும் இல்லாமல் தனியே இருவர் ஒரே மாதிரியான ஆயுதங்களை எடுத்து ஒருவருடன் ஒருவர் பொருதுவது என்று பொருள்.
துருபதன் தன் வில்லை நாணேற்றினான். சரமாரியாக அவன் விட்ட அம்புகளை அர்ச்சுனன் மிகவும் சாமர்த்தியமாகத் தன் அம்புகளால் ஒடித்தான். அவன் எய்த அம்புகளில் ஒன்று, துருபதனின் வில்லை முறித்தது. மற்றொன்று, துருபதனின் கிரீடத்தை அடித்துத் தள்ளியது.
துருபதன் அர்ச்சுனனிடம் சரணடைந்தான். அர்ச்சுனன் அவனுக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாமல், அவனை அழைத்துக் கொண்டு துரோணரிடம் சென்றான்.
துரோணரின் எதிரில் வந்து நின்றதும்தான், துருபதனுக்கு அர்ச்சுனன் தன்னைப் போருக்கு அழைத்ததற்குக் காரணம் தெரிந்தது. அவன் வெட்கித் தலைகுனிந்தான். 'துரோணர் என்ன செய்வாரோ, எப்படி எப்படியெல்லாம் நம்மை அவமானப்படுத்துவாரோ!' என்று எண்ணியபடி அவன் மனம் புழுங்கினான்.
துரோணர் ஓடி வந்து துருபதனை மார்புறத் தழுவிக்கொண்டார். என் அன்பு நண்பா! எனக்கு உன் நாடு நகரம் எதுவும் தேவையில்லை. நான் உன்னை வென்றது உன் அன்புக்காக, அரசுக்காக அல்ல'' என்று கூறினார்.
துருபதன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அன்றுமுதல் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக வாழ்ந்தனர்.