ஒரு நாள் கண்ணபிரானுக்குத் தலைவலி வந்தது. அவர் சத்தியபாமையிடம் தமக்குத் தலைவலி என்பதைச் சொன்னார். அவள் அதை ருக்மிணிக்கும், கண்ணபிரானின் மற்ற மனைவிமார்களுக்கும் தெரிவித்தாள்.
அவர்கள் எல்லாரும் தனித்தனியே சந்தனத்தை அரைத்துக் கொண்டு வந்து கண்ணனின் நெற்றியிலும் பொட்டிலும் பற்றுப் போட்டார்கள். வலி குறைவதற்குப் பதிலாகக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாயிற்று.
நாரதர் வந்து, "சுவாமி! உமது தலைவலிக்கு எந்த மருந்து போட்டால் குறையும் என்பதை நீங்களே சொல்லிவிடுங்கள்!'' என்றார்.
“மகாபக்தர்களுடைய பாதத்தூளியைக் கொண்டு வந்து சந்தனத்துடன் கலந்து தடவினால் என் தலைவலி, வந்த வழியே போய்விடும்" என்றார் கண்ணன்.
நாரதர் சிறந்த ராமபக்தராகிய அனுமாரிடம் சென்று அவருடைய பாததூளியைக் கேட்டார்.
அதற்கு அனுமார், "நாரத முனிவரே! நீங்களும் சிறந்த பக்தரல்லவா? என் பாத தூளிக்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்களே!" என்று கேட்டார்.
நாரதர், "ஸ்ரீகிருஷ்ண பகவானுக்குப் பாததூளி தரும் அளவுக்குப் பெரிய பக்தன் நான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை'' என்றார்.
அவர் பேச்சைக் கேட்ட அனுமாருக்கு, 'மருந்தாகக்கூட நம் பகவானுக்கு நமது பாததூளியைத் தரலாமா?' என்ற சந்தேகம் விழுந்தது. அவர் தயக்கத்துடன், "நாரதரே! பிரகலாதனைப் போய்ப் பாரும்'' என்றார்.
நாரதர் பிரகலாதனை மட்டுமல்லாமல் பராசரர், புண்டரீகன், வியாசர், அம்பரீஷன். சுகர், சௌனகர் போன்ற பிரசித்திபெற்ற ஹரிபக்தர்கள் எல்லாரையும் கண்டு கண்ணனுக்காகப் பாததூளி தருமாறு கேட்டார்.
ஆனால் அவர்கள் எல்லாருக்குமே அனுமாருக்கும் நாரதருக்கும் ஏற்பட்ட சந்தேகம் எழுந்தது. அதனால் பாததூளி கிடைக்கவில்லை.
நாரதர் ஒன்றும் தோன்றாமல் திரும்பி வந்துகொண்டிருந்தார். பிருந்தாவனத்தின் வழியே வந்து கொண்டிருந்த போது ஒரு கோபிகை அவரைக் கண்டு, "மகரிஷியே! ஏன் அவ்வளவு விசாரமாய் இருக்கிறீர்கள்? என்ன நடந்தது?'' என்று கேட்டாள்.
"ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தலைவலி வந்து மிகவும் சிரமப்படுகிறார். அதற்குப் பக்தர்களுடையப் பாததூளியைப் பற்றுப் போட்டால் சரியாகிவிடுமாம். எங்கெல்லாமோ தேடிக் கிடைக்காமல் திரும்பி வருகிறேன்'' என்றார் நாரதர்.
"ஐயையோ! என் கண்ணனுக்குத் தலைவலியா! இந்தாருங்கள் பாததூளி. உடனே கொண்டுபோய் மருந்தைப் போடுங்கள்" என்று தன் பாததூளியைக் கொடுத்தாள் கோபிகை.
நாரதர் அதைக் கொண்டு போய்ப் பற்றுப் போட்டவுடன் கண்ணனுடைய தலைவலி கையில் பிடித்தாற்போல் நின்றுவிட்டது.
பிறகு சத்தியபாமை நாரதரைப் பார்த்து, “மகரிஷியே! கடுகளவு பாததூளிக்காக இவ்வளவு நேரம் செய்துவிட்டீர்களே!" என்று கேட்டாள். அவர் தாம் போய்ப் பல இடங்களில் அலைந்ததையும், கடைசியில் கோபிகையிடம் கிடைத்ததையும் சொன்னார்.
அதைக் கேட்ட ருக்மிணி, "அந்தக் கோபிகை உங்கள் எல்லாரையும் விடப் பக்திமிக்கவளா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"ஆம், அப்படித்தான் நினைக்க வேண்டும். கிருஷ்ண பகவானுடைய தலைவலியை உடனே போக்க வேண்டும் என்ற ஆதங்கத்தைத் தவிர வேறொன்றும் அவள் நினைவுக்கு வரவில்லை. மருந்து பலித்தது. எங்களால் அப்படி முடியவில்லையே!'' என்றார் நாரதர்!