தலைகுனிந்தபடி நடந்துகொண்டிருந்த கர்ணன் மீது உராய்ந்தபடி ஏதோ ஒரு மிருகம் ஓடியது. சிறுவனான அவன் பதறிப் போனான்.
வீரர்களுக்கேயுரிய இயற்கையான சுபாவத்தோடு அவன் சட்டென்று தன் வில்லை நாணேற்றி அம்பை விடுத்தான். அந்த மிருகம் அடிபட்டுச் செத்து விழுந்தது. அப்போதுதான் கர்ணன், தான் கொன்றது ஒரு பசுவை என்று உணர்ந்தான்.
அந்தப் பசு ஓர் ஏழை வேதியனுடையது. மாட்டைப் பிடிப்பதற்காக ஓடிவந்த அவன் இறந்துவிட்ட தன் பசுவையும் அதன் அருகில் அமர்ந்திருந்த வில்வீரனையும் பார்த்ததுமே கோபப்பட்டான்.
"பெரியவரே! அறியாமல் பிழை செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கர்ணன் எவ்வளவோ வேண்டிக் கொண்டான். ஆனால் அந்த வேதியரின் மனம் இளகவே இல்லை.
"பசு சாதுவானது. யாருக்கும் தீங்கிழைக்காது. நிர்க்கதியான அதைப் போய் உன் வில்வலியினால் கொன்றாய் அல்லவா? நிர்க்கதியாக நீ நிற்கும் போது ஒரு வில்வீரன் உன்னைக் கொல்வான்; போ!''
சாபத்திற்கு மேல் சாபம்; துன்பத்திற்கு மேல் துன்பம்! இவ்வளவுக்கும் கர்ணன் செய்த பிழைதான் என்ன? கற்க விரும்பி அவன் சொன்ன அந்த ஒரு சிறு பொய்யா அல்லது உண்மையான அவனது குருபக்தியா?
கர்ணன் சோகத்தோடு அஸ்தினாபுரத்திற்குத் திரும்பினான்.
அஸ்தினாபுரம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. எங்கும் கொடிகள் பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தன. தோரணங்கள் அலங்காரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.
அரண்மனை வாசலில் ஒரு மைதானத்தில் கூட்டமாக இருந்தது. கர்ணனும் கூட்டத்துள் நுழைந்து பார்த்தான். அங்கு வீரர்கள் பலர் பலவிதமான போட்டிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. கடைசியில் வில் வலிமையைச் சோதிக்கும் போட்டி நடந்தது.
அதில் பாண்டவர்களும் கௌரவர்களும் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். அர்ஜுனன் தன் திறமையால் எல்லாரையும் வென்றுவிட்டான். கூடியிருந்த கூட்டம் அவனை மெச்சும் வகையாக ஆரவாரித்தது.
கர்ணனுக்குப் பொறுக்கவில்லை. அவன் சோகம் ஆத்திரமாக மாறியது. போட்டியில் கலந்து கொள்ள அவன் முன் சென்றான். அர்ஜுனன் எவ்விதத்திலெல்லாம் தன் திறமையை வெளிப்படுத்தினானோ, அவ்விதத்திலெல்லாம் தானும் சளைத்தவனல்ல என்பதைக் கர்ணன் நிரூபித்தான்.
கடைசியில் அர்ஜுனனும் கர்ணனும் நேருக்கு நேரே மோதிப் பார்த்து, அதில் யார் சிறந்தவர் என்று பார்க்கப்பட வேண்டிய கட்டம்.
அப்போது பீமன் எழுந்து நின்றான். "அதிரதனின் மகனான நீ ஒரு தேரோட்டி மகன். அர்ஜுனன் அரசகுமாரன் உன்னோடு மோதுவது அவனுக்கும் எங்களுக்கும் இழுக்கை விளைவிக்கும்" என்று கூறினான்.
கர்ணன் வெட்கித் தலைகுனிந்தான். அவனைத் தேற்றுவார் யார்? துரியோதனன் எழுந்து வந்து கர்ணனை மார்புறத் தழுவிக் கொண்டான். கர்ணா! உன்னிடம் போர்புரியப் பயந்து பாண்டவர் ஒதுங்குகிறார்கள் போலும்! நீ வேதனைப்படாதே. உன்னை நான் அங்க தேசத்து அரசனாக ஆக்கினேன். உயிர்நண்பனாகவும் ஏற்றுக்கொண்டேன்'' என்று கூறித் தட்டிக் கொடுத்தான்.
உலகம் முழுவதும் தன்னை இகழ்ந்த நேரத்தில் உறுதுணையாக வந்து நண்பனென்று ஏற்றுக்கொண்ட துரியோதனனை நன்றி மல்கும் கண்களால் கர்ணன் பார்த்தான்!