சாதகவர்மன் என்ற திறமை வாய்ந்த ஓர் அரசர் இருந்தார். விவேகபுரியைத் தலை நகராகக் கொண்டு அவரது அரசாட்சி நடைபெற்றது. மக்கள் நலனையே தலையாயதாகக் கருதிச் சாதகவர்மன் அரசு செலுத்தினார். மக்கள் எவ்வித குறைவுமின்றி வளமாக வாழ்ந்தார்கள். ஆகவே மன்னனின் புகழ் எங்கும் பரவியது.
அரசக் குடும்பத்தில் பிறந்த சாதகவர்மன் பிறந்தது முதல் அரசனுக்குரிய ராஜபோகங்களுக்கிடையில் வாழ்ந்தான். அரசனாக முடி சூட்டப்பட்ட பிறகு, அரியணையில் அமர்ந்து பல சாதனைகள் நிகழ்த்திப் புகழ் பெற்றான். பல ஆண்டுகள் சக்கரவர்த்தியாகப் புகழ் வாழ்க்கை வாழ்ந்த அரசனுக்கு, காலம் செல்லச்செல்ல உலக வாழ்க்கையில் வெறுப்பு தோன்றியது.
முறை வழுவாது அரசாண்டதால் அரசனின் மனம் நல்ல பரிபக்குவத்தைப் பெற்றது. காலமெல்லாம் உலக இன்பங்களையும் பெரும் சிறப்புக்களையும் வாழ்க்கையில் கண்ட மன்னனுக்கு, அவைகளின்பேரில் இருந்து வந்த நாட்டம் போய்விட்டது. கடவுள் சிந்தனையில் ஆழ்ந்து தோய்ந்திருக்க அவன் உள்ளம் விழைந்தது. 'கடவுள் சாட்சாத்காரம் ஒன்றே ஒன்று தான் வாழ்க்கையின் ஒரே இலட்சியம்' - என்பதைப் பண்பட்ட அவனது உள்ளம் உணர்ந்து விட்டது. மன்னன், மத உண்மைகளைப் புகட்டும் சாஸ்திரங்களைப் படிக்கவும் சிந்திக்கவும் தொடங்கினான். அவைகள், இதுவரையிலும் பரபரப்பு நிறைந்த வாழ்க்கைச் சூழலில் இருந்து வந்த மன்னனுக்கு, முதல் முறையாக அமைதியின் சுவையை உணர வைத்தன.
ஒருமுறை அரசன் ஸ்ரீமத் பாகவதத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அதில் சுகதேவர், பரீட்சித்து மகாராஜாவுக்கு ஏழு நாட்கள் ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துச் சொன்னதும், அதைக் கேட்டே பரீட்சித்து மகாராஜா ஆத்ம ஞானம் அடைந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பகுதியைப் பாகவதத்தில் படித்ததும் அரசனின் உள்ளத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
'ஆஹா! ஆத்ம ஞானத்தை அடைவதற்கு இப்படிப்பட்ட ஒரு சுலபமான வழியிருப்பது எனக்கு இதுவரையிலும் தெரியாமல் போய் விட்டதே! நானும் இப்போது பரீட்சித்து மன்னனைப் போலவே பாகவதத்தைச் சொல்லக் கேட்கிறேன்'' என்று நினைத்தான் சாதகவர்மன்.
உடனே அரசன் தனது அமைச்சரை அழைத்து, ''எனக்கு ஸ்ரீமத் பாகவதத்தைச் சொல்லக்கூடிய நன்றாகப் படித்த ஒரு பண்டிதரை ஏற்பாடு செய்யுங்கள்'' என்று சொன்னான்.
அரசனின் ஆவலைக் கேட்டதுமே அமைச்சருக்குப் புகழ்பெற்ற பண்டிதர் ஒருவருடைய ஞாபகம் வந்தது. ''மன்னர் பெருமானே! நமது விவேகபுரியிலேயே மகாபண்டிதர் ஒருவர் இருக்கிறார். உலகப் புகழ் பெற்றுள்ள அவரைப் பற்றித் தெரியாதவர்களே கிடையாது. தேவரீருக்கும் அவரைப் பற்றித் தெரியும். பிரம்மஸ்ரீ புராண வல்லப, சகலகலாவல்ல இதிகாச ஆசார்ய, சித்தாந்த பூஷண, வேதாந்த கேசரி ஸ்ரீஸ்ரீ ராஜுசர்மா அவர்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன். அவருக்கு ஸ்ரீமத் பாகவத புராணமே தலைகீழ்ப் பாடமாகத் தெரியும். பாகவதத்தை அவ்வளவு நுட்பமாகப் படித்தவர்கள் யாருமே கிடையாது என்று சொல்லலாம். அவருடைய பாகவதப் புராணத்தைக் கேட்டு மக்கள் அப்படியே மெய்மறந்து சொக்கிப் போய்விடுகிறார்கள். சக்கரவர்த்தியின் ஆவலை நிறைவேற்றி வைப்பதற்கு எல்லா விதத்திலும் முற்றிலும் தகுதி வாய்ந்த மகா பண்டிதர் அவர். பாகவதப் பிரசங்கிகளிலேயே அவர் தான் தலைசிறந்தவர் என்பது மக்களுடைய ஏகோபித்த அபிப்பிராயம். அவருடைய பிரசங்கம் எங்கே நடைபெற்றாலும், எந்த நேரத்தில் நடைபெற்றாலும் மக்கள் ஆயிரமாயிரமாகக் கூடுகிறார்கள். எள்விழ இடமின்றி கூட்டம் கூடுகிறதென்றால், அது அந்த மகாவித்வானுடைய புராண பிரசங்கத்திற்குத் தான் என்று சொல்ல
வேண்டும். அவரது பிரசங்கத்தைக் கேட்க வரும் மக்கள், காணிக்கையாகப் பரிசுப் பொருள்களை வாரிவாரித் தருகிறார்கள், அறிஞர்கள் அடங்கிய பல கழகங்களைச் சேர்ந்தவர்கள் அவருக்கு ஏராளமான பட்டங்களைச் சூட்டியும் பதக்கங்களைக் கொடுத்தும் கௌரவித்திருக்கிறார்கள். சக்கரவர்த்தியின் ஆவலை நிறைவேற்றி வைப்பதற்கு எல்லா விதத்திலும் முற்றிலும் தகுதி வாய்ந்த பண்டிதராக இருப்பவர் அவர்தான்'' என்று அரசனிடம் தெரிவித்தார் அமைச்சர்.
சக்கரவர்த்தி சாதகவர்மன், அமைச்சர் குறிப்பிட்ட மகாபண்டிதரிடமே ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்க நிச்சயித்தான். ஆகவே அமைச்சரிடம், ''தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். அந்தப் பண்டிதரே எனக்குக் குருவாக இருந்து ஸ்ரீமத் பாகவதத்தைப் போதிக்கட்டும். அவரது புராண பிரசங் கத்திற்கு இதுவரையிலும் ஒவ்வொரு நாளும் கிடைத்துவந்த தொகையைக் காட்டிலும், அதிகமான தொகையை ஒவ்வொரு நாளும் நமது அரண்மனை பொக்கிஷத்திலிருந்து கொடுத்து வர ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டான்.
அரசனின் ஆணைப்படியே அமைச்சர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். மகா பண்டிதர் ராஜு சர்மாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அழைப்புக் கிடைத்தவுடன் பண்டிதருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கோ அளவில்லை. இப்படி ஒரு பெருமை வாழ்க்கையில் தனக்குக் கிடைக்கும் என்று அவர் கனவிலும் எதிர்பார்த்தது கிடையாது. 'நாடாளும் மன்னனுக்கே குருவாக அமர்ந்து போதிப்பதென்றால் சாதாரண விஷயமா?' என்று பலவாறு சொல்லி அவரிடம் நெருங்கிப் பழகியிருந்தவர்களெல்லாம் அவரை வாயாரப் பாராட்டினார்கள்.
அரண்மனையில் அரசனுக்கு ஸ்ரீமத் பாகவதத்தைப் போதிக்க ஆரம்பித்தார் பண்டிதர். அவர் தமது முழுத்திறமையையும் செலுத்தி பாகவதத்தை பல கோணங்களிலும் அரசனுக்கு எடுத்துச் சொன்னார். சாஸ்திரங்களிலிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டி விளக்கினார்.
இவ்விதம் இரண்டு மாதகாலம் பாகவத வகுப்புக்கள் முறையாக நடந்தன. பாகவதத்தைச் சிரவணம் செய்வதால் தனக்கு ஆத்ம ஞானம் ஏற்பட்டுவிடும் என்று நினைத்திருந்த அரசன், அப்படி ஆத்மஞானம் ஏதும் தனக்கு ஏற்படவில்லை என்பதை உணர்ந்தான். ஆகவே ஒருநாள் அவன் பண்டிதரிடம் வெளிப்படையாகவே, ''சுவாமி! பாகவதத்தை பரீட்சித்து மன்னன் ஏழே நாட்கள் தான் சிரவணம் செய்தார். அந்த ஏழு நாட்களிலேயே பரீட்சித்துவுக்கு ஆத்ம ஞானம் ஏற்பட்டுவிட்டது. நானோ உங்களிடம் இரண்டு மாதமாக பாகவதம் கேட்டு வருகிறேன். அப்படியிருக்கும்போது எனக்கு இன்னமும் ஆத்ம ஞானம் ஏற்படவில்லையே! இதற்கு என்ன காரணம்? காரணத்தை நீங்கள் எனக்கு நாளைக் காலையிலேயே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தினந்தோறும் தங்களுக்கு நான் கொடுத்துவரும் ராஜசன்மானங்கள் நிறுத்தப்படும்'' என்று சொல்லிவிட்டான்.
அரசனுக்கு என்ன பதில் சொல்வதென்றே பண்டிதருக்குப் புரியவில்லை. காரணம் அவருக்கும் தெரியவில்லை. ஆகவே மிகுந்த மன வருத்தத்துடன் பண்டிதர் தமது வீட்டிற்குத் திரும்பினார்.
பண்டிதருக்கு ஒரு சிறிய பெண் இருந்தாள். மகா மேதை என்பது அந்தப் பெண்ணின் பெயர். பெயருக்கு ஏற்ப புத்திசாலியான அவள், தந்தை அரண்மனையிலிருந்து திரும்பியதும் வழக்கத்திற்கு மாறாக வாடிய முகத்துடன் இருப்பதைக் கவனித்தாள். சோர்ந்து போயிருந்த பண்டிதரிடம், ''அப்பா, நீங்கள் ஏன் இப்படி ஒரேயடியாகக் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? அரண்மனையில் துன்பத்தைத் தரக்கூடிய சம்பவம் ஏதாவது நடந்ததா?'' என்று விசாரித்தாள்.
'மகளே, பெரியவர்களுடைய கவலைகள் உனக்கு எதற்கு? என் கவலை என்னோடு போகட்டும். உனக்குத் தெரிந்து அதனால் என்ன லாபம் வரப்போகிறது? நீ உனது காரியங்களைப் பாரம்மா'' என்று மகளிடம் சொன்னார் பண்டிதர்.
ஆனால் தந்தை சொல்லியதைக் கேட்டு, அதோடு மகாமேதை விட்டுவிடுபவளாக இல்லை. ''உங்கள் கவலை என்ன என்று சொல்லித்தான் பாருங்களேன். குழந்தைகள் என்றாலும் அவர்களுக்கும் கொஞ்சம் புத்தி இருக்கத்தானே செய்கிறது? சிறு துரும்பும் பல் குத்த உதவும்; இரும்பினால் செய்யப்பட்ட ஈட்டி நுழையாத பாறைக்குள்ளும் பசு மரத்தின் வேர் நுழைந்து விடுகிறது. உறுதி வாய்ந்த பெரிய ஈட்டியால் செய்ய முடியாத காரியத்தை, சின்னஞ்சிறிய முள் செய்துவிடும் என்பதை மறுக்க முடியாதல்லவா?'' என்று கேட்டாள்.
பண்டிதருக்கும் மகளின் புத்திசாலித்தனம் தெரிந்துதான் இருந்தது. ஆனால் இப்போது அவளால் தனக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்ற நினைவுடனேயே, மகள் விடாப் பிடியாயிருந்ததால் விஷயத்தை அவளிடம் தெரிவித்தார் பண்டிதர்.
தந்தை சொன்னதைக் கவனமாகக் கேட்ட மகாமேதை, 'அப்பா! நாளைக்கு அரண்மனைக்குப் போகும்போது என்னையும் உங்களுடன் அழைத்துப் போங்கள். மன்னனின் கேள்விக்கான சரியான பதிலை நானே அவரிடம் சொல்கிறேன்'' என்று சொன்னாள்.
பண்டிதருக்கு மகளின் பேச்சு விளையாட்டுத்தனமாகப்பட்டது. ஆனால் அவளுடைய பேச்சை அவரால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை.
மறுநாள் ராஜுசர்மா மகளை அழைத்துக் கொண்டு அரச சபைக்குச் சென்றார். பண்டிதர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத்தெரிந்து கொள்வதற்காக விவேகபுரியின் மன்னன் ஆவலோடு காத்திருந்தான்.
பண்டிதர் அரசருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, அரசரே, தங்களுடைய கேள்விக்கு என்னுடைய மகள் பதில் சொல்லுவாள்'' என்று சொன்னார்.
பண்டிதர் தன்னுடைய மகளை அழைத்து வருவார் என்றோ, அவள் தனது கேள்விக்குப் பதில் சொல்லுவாள் என்றோ சாதகவர்மன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவன் வியப்புடன், ''குழந்தாய்! நீ என்ன பதிலைச் சொல்லப்போகிறாய்?'' என்று கேட்டான்.
“பேரரசரே, தங்களுடைய கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்பு, நான் சொல்வதைப்போல சிறிது நேரம் தாங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்'' என்றாள் மகாமேதை.
அரசர் சம்மதித்தார். “மன்னர் பெருமானே! இதோ இங்கே இரண்டு தூண்கள் இருக்கின்றன. ஒரு தூணில் என்னை நன்றாக இறுக்கிக் கட்டுவிடும்படி உங்கள் சேவகர்களுக்கு கட்டளையிடுங்கள். அப்படியே மற்றொரு தூணில் தங்களைக் கட்டிப் பிணைக்கும்படி சொல்லுங்கள்'' என்றாள் மகாமேதை.
மகாமேதை சொன்னபடியே அரசனையும் சிறுமியையும் கயிற்றைக் கொண்டு சேவகர்கள் தூண்களில் கட்டினார்கள். பிறகு சிறுமி அறையில் இருந்தவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறிவிடும்படி கூறினாள்.
அறையில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். அரசனும் மகாமேதையும் தூண்களில் கட்டப்பட்ட நிலையில் தனியாக இருந்தார்கள்.
''மன்னரே! நான் இப்படி மாட்டிக்கொண்டு தூணில் கட்டப்பட்டு இருக்கிறேனே! தயவு செய்து எனது கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள்'' என்று கெஞ்சும் குரலில் மகாமேதை அரசனிடம் வேண்டிப் பிரார்த்தித்தாள்.
சிறுமி மன்றாடிக் கேட்டதும் அரசர், "பெண்ணே, உனக்கு என்ன மூளை கலங்கிப் போய்விட்டதா? முட்டாள்தனமாக அல்லவா உன்னுடைய பேச்சு இருக்கிறது? நானே இங்குள்ள தூணில் கட்டப்பட்ட நிலையில் இருந்து கொண்டிருக்கிறேன். நீயே இதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறாய். தூணில் கட்டப்பட்டுள்ள நான் கட்டப்பட்டுள்ள உன்னை எப்படி விடுவிக்க முடியும்?'' என்று கேட்டார்.
அதைக் கேட்ட உடனே மகாமேதை கலகலவென்று சிரித்தாள்.
“மகராஜா! உங்களுடைய கேள்விக்கான சரியான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள்! பரீட்சித்துக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசம் செய்த சுகதேவர் ஆத்மஞானம் அடைந்த மகாஞானி, பரமஹம்சர். அவரிடம் பாகவதம் கேட்ட பரீட்சித்து மன்னன் ஏழு நாட்களிலேயே ஆத்ம ஞானத்தை அடைந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. என்னுடைய தந்தையோ அஞ்ஞானத்தில் இருப்பவர். உலகப் பற்று நிறைந்தவர். மாயையிலிருந்து விடுபடாமல் பந்தத்தில் இருப்பவர். நீங்கள் தரும் செல்வங்களைப் பெறும் நோக்கத்துடன் அவர் உங்களுக்குப் பாகவதம் சொல்லி வந்தார். பணத்திற்கு ஆசைப்பட்டுப் பாகவதம் சொன்ன அவருடைய உபதேசத்தைக் கேட்டு உங்களுக்கு எப்படி ஆத்மஞானம் வரும்?
'வெறும் சாஸ்திர அறிவினால் மட்டும் என்ன பயன் ஏற்படும்? பண்டிதர்களுக்கு சாஸ்திரங்களிலும் சுலோகங்களிலும் மட்டும் நல்ல பழக்கம் இருக்கலாம். ஆனால் அவைகளை கிளிப்பிள்ளையைப் போல திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்வதால் மட்டுமே என்ன நன்மை ஏற்படும்? உண்மையிலேயே ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற்றத்தைப் பெறவேண்டுமானால், சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளை நடைமுறை வாழ்க்கையில் அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டும். ஒருவனுடைய உள்ளத்தில் காமம், பணம் போன்ற உலகப் பற்றுக்கள் இருக்கும் வரையிலும், கேவலம் சாஸ்திரப்படிப்பு மட்டும் ஆத்ம ஞானத்தைத் தராது. அப்படிப்பட்டவன் முக்தியைப் பெறவும் வழியில்லை.
மீண்டும் சொல்கிறேன். எரியும் தீபத்தைக் கொண்டுதான் மற்றொரு தீபத்தை ஏற்ற முடியும். அதைப்போல பந்தத்திலிருந்து விடுபட்ட ஆத்மஞானி ஒருவரால்தான், பந்தத்திலிருந்து பிறரை விடுவித்து ஆத்ம ஞானத்தைப் பெறும்படி செய்யமுடியும்'' என்று சிறுமி பேசி முடித்தாள்.
சிறுமி சொன்ன உண்மை அரசனுக்கு விளங்கியது. அரண்மனைச் சேவகர்கள் அறையில் நுழைந்து, மன்னனையும் மகாமேதையையும் பிணைத்திருந்த கட்டுக்களை அவிழ்த்து விடுவித்தனர்.
அன்றிரவு அரசன் அரண்மனையைவிட்டு வெளியேறினான். இமயமலைச் சாரலில் உள்ள ஆத்மஞானி ஒருவரை அடைந்து மெய்ஞானம் பெறுவதற்காகப் பயணப்பட்டான்.