ஓர் அரசனிடம் ஒரு மந்திரி இருந்தார். ஒரு நாள் மந்திரி மீது கோபம் கொண்ட அரசன் அவரை சிறையில் அடைத்துவிட்டான். சிறை என்றால், நகரத்திற்கு வெளியே ஒரு கோபுர உச்சியில் அடைத்து விட்டார். இறங்குவதற்குப் படிக்கட்டுகள் கிடையாது. அங்கிருந்து தப்பிப் போகவும் முடியாது. அப்படியே அந்த மந்திரி பசியிலும் வெயிலிலும் வாடி இறந்து போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
அன்றிரவு மந்திரியின் மனைவி அந்தக் கோபுரச் சிறையின் அடிவாரத்திற்குப் போனாள். ''நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். என்ன தேவை சொல்லுங்கள்'' என்று கேட்டாள்.
மந்திரி அவளை மறுநாள் இரவு வரச்சொன்னார். அப்படி வரும்போது நீண்ட தடிய வடக்கயிறு, மெல்லிய நூல் கயிறு, பட்டு நூல், ஒரு வண்டு, கொஞ்சம் தேன் ஆகியவைகளை எல்லாம் கொண்டு வரச்சொன்னார். எதற்குக் கேட்கிறார் என்று புரியாவிட்டாலும், மந்திரி சொன்னபடியே அவர் மனைவி செய்தாள்.
மறுநாள் இரவு வந்ததும் கணவன் சொன்ன எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்தாள். மந்திரி கோபுர உச்சியிலிருந்து மனைவிக்கு என்ன செய்யவேண்டும் என்று விவரித்தார். பட்டு நூலின் ஒரு முனையை வண்டின் உடலில் சுற்றிக்கட்டி, மறுமுனையை மனைவியைப் பிடித்துக்கொள்ளச் சொன்னார்.
வண்டின் தலையில் தேனைத் தடவி, கோபுரத்தின் அடிவாரத்தில் நின்று கொண்டு அதை உயரப் பார்த்து பறக்கவிடச் சொன்னார். தேனை முகர்ந்தபடி வண்டு மேலே பறக்க ஆரம்பித்தது. எங்கோ கோபுரத்தின் உயரத்தில் தேன் இருப்பதாக நினைத்து வண்டு உயர உயர பறந்தது. வண்டு கோபுர உச்சிக்கு வந்ததும், மந்திரி அதை எட்டிப் பிடித்துக்கொண்டார். பட்டு நூலைப் பற்றிக்கொண்டார்.
கீழே இருந்த மனைவியைப் பார்த்து, பட்டு நூலின் நுனியில் கெட்டி நூலைக் கட்டச்சொன்னார். பிறகு அவர் பட்டு நூலை மெல்ல இழுக்க இழுக்க, கெட்டி நூல் கோபுரத்தின் உச்சிக்கு வந்தது. கெட்டி நூலின் ஒருமுனை அவர் கைக்கு வந்தது. பிறகு அதன் மறுமுனையில் தடிய வடக்கயிற்றைக் கட்டச் சொன்னார். இப்போது மெல்ல மெல்ல வடக்கயிற்றை மேலே இழுத்துக் கொண்டார்.
அப்புறம் என்ன? எல்லாம் சுலபமாக முடிந்தது. வடக்கயிற்றை கோபுர உச்சியில் வலுவாகக் கட்டினார். அதைப் பிடித்துக்கொண்டு விருவிரு என்று வேகமாக இறங்கினார். கோபுரச் சிறையிலிருந்து தப்பிவிட்டார் மந்திரி!