ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகியவர்கள் மூவரும் வனவாசம் மேற்கொண்ட போது தண்டகாரண்ய வனப்பகுதியை அடைந்தார்கள்.
அங்கு அவர்கள் பர்ணசாலை அமைத்துத் தங்க விரும்பினர்.
எனவே ஸ்ரீராமர், "இந்த இடம் யாருக்குச் சொந்தம்? இங்கு நாம் தங்கலாமா? என்று தெரிந்துகொண்டு வா" என்று லட்சுமணனை அனுப்பினார்.
லட்சுமணன் நாலா பக்கங்களிலும் தேடிப் பார்த்தார். அவருக்கு அங்கு யாரும் தென்படவில்லை.
வேறு வழியில்லாத நிலையில் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
தியானத்தில் அவருக்குப் பின்வரும் ஒரு காட்சி தென்பட்டது.
முனிவர் ஒருவர் தனது இரு கைகளில் ஒன்றால் நாக்கை பிடித்துக்கொண்டும், மற்றொரு கையைக் கௌபீனத்தின் மீது வைத்துக்கொண்டும் இருந்தார்.
தியானத்தில் இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு லட்சுமணன் ஸ்ரீராமரிடம் திரும்பிச் சென்று, "யாரும் என் கண்ணில் தென்படவில்லை" என்று கூறி, தனது தியானக் காட்சியையும் தெரிவித்தார்.
லட்சுமணனின் தியானக் காட்சியைப் பற்றி அறிந்த ஸ்ரீராமர், "பர்ணசாலை அமைப்பதற்கு நமக்கு அனுமதி கிடைத்து விட்டது; நாவை அடக்கவும், காமத்தை அடக்கவும் யார் பயிற்சி பெற்றிருக்கிறார்களோ அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்குத் துன்பம் வராது என்பதுதான் நீ கண்ட தியானக் காட்சியின் பொருள். நம்மிடம் இந்த இரண்டு அடக்கங்களும் உள்ளன. எனவே நமக்கு ஆபத்தில்லை" என்றார்.