பக்த மீராபாய் பிருந்தாவனத்தில் தங்கி இறைவன் கண்ணனையே எப்பொழுதும் வழிபட்டு வந்தார்.
அப்போது மக்களால் போற்றிப் புகழப் பெறும் வல்லபாச்சாரியார் என்ற, குரு பிருந்தாவனத்திற்கு வருகை தந்தார்.
அவரைச் சந்தித்து அவருடைய அருளுரைகளைக் கேட்க விரும்பினார் மீராபாய்.
ஆதலால், "வல்லபாச்சாரியாரைத் தரிசனம் செய்ய விரும்புகிறேன்” என்று மீராபாய் செய்தி அனுப்பினார்.
ஆனால் வல்லபாச்சாரியாரோ, "நான் பெண்களையே பார்ப்பதில்லை. எனவே மீராபாயை நான் சந்திக்கமாட்டேன்" என்று பதில் அனுப்பினார்.
அதைக் கேட்ட மீராபாய், “இந்தப் பிருந்தாவனத்தில் ஒரே ஓர் ஆண் மகன்தான் உண்டு. அவர்தான் கண்ணன். மற்ற எல்லோரும் பெண்கள்தான். அவரைத் தவிர, வேறு எந்த ஆண் மகனுக்கும் இங்கே அனுமதி கிடையாது.
"வல்லாபாச்சாரியாருக்குத் தான் ஆண்மகன் என்ற எண்ணம் இருக்குமானால், உடனே அவரைப் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு வெளியேறும்படிச் சொல்லுங்கள்” என்றாள்.
அதைக் கேட்ட வல்லபாச்சாரியார் திடுக்கிட்டார்.
'நாம் அவசரப்பட்டு மீராபாயைப் பெண் என்று சொல்லி விட்டோமே! கண்ணனே ஆண் மகன் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை இவர் நன்குணர்ந்திருக்கிறார்' என்று நினைத்த அவர், மீராபாயைச் சந்தித்துத் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.