குருநாதர் ஒருவர் தமது சீடர்களுக்குப் பகவத்கீதை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.
அவர் சில அத்தியாயங்கள் முடிந்த பிறகு, "கண்ணன் கீதையின் முதல் அத்தியாயத்தில் என்ன உபதேசித்தான்?” என்று சீடர்களிடம் வினவினார்.
சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தனர். ஏனென்றால் கண்ணனின் உபதேசம் இரண்டாவது அத்தியாயத்தில்தான் ஆரம்பிக்கிறது.
"அர்ஜுனன் கூறியதற்கு இணங்க அவனுடைய தேரைக் கண்ணன் ஓட்டிச் சென்று, பாண்டவ - கௌரவ சேனைகளுக்கு இடையே நிறுத்தினான். இது முதல் அத்தியாயத்தில் உள்ள செய்தி. தான் ஏற்றுக்கொண்ட தேர்ச்சாரதி பொறுப்பை உரியபடி கண்ணன் நிறைவேற்றினான். அதாவது, பலனை எதிர்பாராமல், தன்னுடைய கடமையைக் கண்ணன் செய்தான்.
"கண்ணனின் இந்தச் செயல், 'கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்ற கீதையின் முக்கிய உபதேசத்தை உணர்த்துகிறது. இதுவே முதல் அத்தியாயத்தில் பொதிந்துள்ள உபதேசம்” என்று தெளிவுப்படுத்தினார் குருநாதர்.