மகாபாரதப் போர் நடைபெற இருக்கிறது.
அந்தப் போர் ஆரம்பிக்கும் சமயத்தில் அர்ஜுனன், "போர் செய்யமாட்டேன்!” என்கிறான்.
அதனால் கண்ணன், அர்ஜுனனுக்குப் பகவத் கீதையை உபதேசம் செய்தார்.
'சரி, இனிமேல் யுத்தம் ஆரம்பமாகிவிடும்!' என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் தர்மபுத்திரர் என்ன செய்தார் தெரியுமா?
தன்னுடைய கவசத்தையும், ஆயுதங்களையும் கழற்றி வைத்து விட்டு பீஷ்மரை நோக்கி நடந்து சென்றார்.
'தர்மர் ஏன் இப்படி அங்கே போகிறார்?' என்று யாருக்கும் புரியவில்லை. இருந்தாலும் தர்மரின் சகோதரர்களும், ஸ்ரீகிருஷ்ணனும் அவர் பின்னால் சென்றார்கள்.
தர்மர் நேராக பீஷ்மர் முன்னால் போய் நின்று, ‘‘நான் உங்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டும். அதற்கு எனக்குத் தங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்!” என்று கேட்கிறார். இவர் இப்படி கேட்டதும் பீஷ்மர் சந்தோஷப்பட்டார்.
“நீ என்னுடைய ஆசியைப் பெறாமல் யுத்தத்தை ஆரம்பித்திருந்தால் ‘நீ தோற்றுப் போக வேண்டும்!’ என்று நான் உன்னைச் சபித்திருப்பேன். ஆனால் இப்போது நீ என் ஆசியைப் பெற்றதால்... நீதான் வெற்றி அடைவாய்!” என்று சொல்லி விட்டு பீஷ்மர், "இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார்.
அப்போதுதான் தர்மர், “தங்களைக் கொல்வதற்கு என்ன வழி?" என்று வினவுகிறார்.
பீஷ்மர், "பிறகு வா. சொல்கிறேன்!” என்றார்.
சொன்னது போலவே பீஷ்மர் தன்னைக் கொல்லும் வழியையும் தர்மருக்குக் கூறினார்.
அதன் பிறகு தர்மர், துரோணாச்சாரியாரின் ஆசியைப் பெறுகிறார்.
துரோணர் என்ன சொன்னார் தெரியுமா?
"எங்கே தர்மம் இருக்கிறதோ, அங்கே ஸ்ரீகிருஷ்ணன் இருப்பார். எங்கே ஸ்ரீகிருஷ்ணன் இருக்கிறாரோ அங்குதான் வெற்றி!” என்கிறார்.
அவரும் தன்னை எப்படி கொல்வது என்ற விவரத்தை தர்மருக்குச் சொல்லிக் கொடுக்கிறார். அது போலவே தர்மர் கிருபாச்சாரியாரிடம் சென்றார்.
"உங்கள் ஆசி வேண்டும்” என்றார்.
கிருபாச்சாரியாரும் தர்மரை ஆசீர்வதித்தார்.
அடுத்தபடியாக தர்மர், "உங்களை எப்படி கொல்வது!” என்று கிருபாச்சாரியாரிடம் கேட்க விரும்புகிறார்.
ஆனால் தர்மரின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வெளிவரவில்லை.
இதைக் கிருபாச்சாரியார் புரிந்து கொள்கிறார். புரிந்துகொண்டு சொல்கிறார்:
“என்னை யாராலும் கொல்ல முடியாது. ஆனால் உனக்குத்தான் வெற்றி!" என்றார்.
இந்த மூன்று பேருமே என்ன சொல்கிறார்கள் என்றால்....
“செஞ்சோற்றுக் கடனுக்காக, நாங்கள் துரியோதனன் பக்கம்தான் இருந்து போர் செய்ய வேண்டும். ஆனாலும் எங்கள் ஆசிகள் உனக்குத்தான்!" என்கிறார்கள்.
தர்மர் கடைசியில் மாமா சல்லியனிடம் சென்றார். சல்லியனின் ஆசீர்வாதமும் பெற்றார்.
பின்னர் தர்மர், சல்லியனிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறார்.
அது என்ன தெரியுமா? "கர்ணன் - அர்ஜுனனுடன் போர் செய்யும் ஒரு நேரம் வரும். அந்தச் சமயத்தில் கர்ணனுடைய உற்சாகத்தை நீங்கள் குறைக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிறார்.
எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்றாலும் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெற்றுத்தான் ஆரம்பிக்க வேண்டுமாம்.
அதைத்தான் தர்மர் செய்தார். அதனால்தான் வெற்றியும் பெற்றார்.