முன்னொரு காலத்தில் புருஷபுரம் என்ற ஊரை ஆண்ட மன்னனிடம் ஒரு மந்திரி இருந்தார். அவர் சிறந்த அறிவாளி. சாதுர்யமும், புத்திகூர்மையும் மிக்கவர்.
ஒரு சமயம் மன்னன், தன் மந்திரியை அழைத்து, “மந்திரியாரே! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பொருத்தமான பதிலைச் சொல்லும், பார்க்கலாம்" என்றான்.
“கேளுங்கள், அரசே!” என்றார் மந்திரி. “முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” என்று மன்னன் கேட்டான்.
மந்திரி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பேசாமல் நின்றார்.
"என்ன? நான் கேட்டது உமது காதில் விழவில்லையா? உம்மைத்தான் கேட்டேன். முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?" என்று மறுபடியும் கேட்டான் மன்னன்.
இதற்கும் பதிலளிக்காமல் மௌனமாக நின்றார் மந்திரி.
அரசனுக்குக் கோபமே வந்து விட்டது.
அவன், “இவருக்கு என்ன அலட்சியம்! மாமன்னன் நான். நான் கேட்கும் கேள்விக்கு இந்த அமைச்சர் பதில் சொல்லாமல் இருக்கிறாரே! என்ன திமிர்!'' என்று கோபப்பட்டான்.
ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "என்ன மரம்போல் நின்று பேந்த பேந்த விழிக்கிறீர். உமக்குக் காது செவிடாகிவிட்டதா? என் கேள்விக்கு இதுதான் பதிலா?" என்று கொஞ்சம் ஆத்திரத்துடன் கேட்டான்.
மந்திரி, ஒருமுறை தலைதாழ்த்தி மன்னனை வணங்கி விட்டு, "அரசே! உங்கள் கேள்விக்கு நீங்கள் கேட்ட அடுத்த கணமே பதிலளித்து விட்டேன். நீங்கள் தான் அதைக் கவனிக்கவில்லை ” என்றார்.
“என்ன? நான் மூன்று தடவை கேட்டும் ஒன்றும் பேசாமல் நீர் மௌனமாக அல்லவா, நின்றிருந்தீர்? என்றான் மன்னன்.
“ஆம், அரசே அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் மௌனம்தான் சாதிக்க வேண்டும்" என்றார் அமைச்சர்.
தன்னை முட்டாள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினாலும் இந்தச் சரியான பதிலைக் கேட்டு மன்னன் ஆத்திரப்படவில்லை; மகிழ்ச்சியே அடைந்தான். இவ்வளவு சாதுர்யமிக்க அவரை மந்திரியாக அடைந்ததை பெரிய பாக்கியமாகக் மன்னன் கருதி, அவருக்குப் பரிசளித்தான்.