பணத்தால் வந்ததைக் கொடுத்து விடு!
பணக்காரன் ஒருவன், தானிருக்கும் ஊருக்கு வந்த மகான் ஒருவரைச் சென்று பார்த்தான்.
“சுவாமி, என்னிடம் ஏராளமான பொன்னும் பொருளும் இருக்கின்றன. இருந்தும் இறைவன் அருள் கிடைக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“பணத்தால் வந்ததை எல்லாம் கொடுத்து விடு... உனக்கு இறைவன் அருள் கிடைக்கும்” என்றார் அந்த மகான்.
மறுநாள் அவன் தன் செல்வம் அனைத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்து மகானிடம் தந்தான்.
பின்னர், “இப்போது எனக்கு இறைவன் அருள் கிடைக்குமா?” என்று கேட்டான்.
அவனைப் பார்த்த மகான், “மகனே! நான் சொன்னது... உன் செல்வத்தைக் கடவுளுக்குத் தரும்படி கூறவில்லை. உன்னிடமுள்ள அகந்தை, ஆணவம், கோபம் போன்ற பணத்தால் வந்த தீய குணங்களைக் கொடுத்து விடு என்றுதான் கூறினேன். செல்வம் வந்த நிலையிலும், செருக்கடையாதவனுக்கு, இறையருள் நிச்சயம் கிட்டும்” என்று அமைதியாகச் சொன்னார்.
அவனுக்கு இப்போது புரிந்தது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.