'ஸ்ரீராமனை நான் சரணடைகின்றேன்' என்று வானில் ஓர் அபயக் குரல் ஒலித்தது.
அங்கிருந்த வானர வீரர்கள் அதைக் கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தனர். ஆகாயத்தில் ஐவர் நின்று கொண்டிருந்தனர்.
''என் பெயர் விபீஷணன். ராவணனின் தம்பி. இந்த நான்கு மந்திரிகளோடு ஸ்ரீராமரை நான் சரணடைய வந்துள்ளேன். இச்செய்தியை அவரிடம் தெரிவியுங்கள்'' என்று அங்கிருந்த வானரர்களிடம் வேண்டிக் கொண்டார் விபீஷணர்.
செய்தியை அறிந்த ஸ்ரீராமபிரான், லட்சுமணன், அனுமன், ஜாம்பவான், சுக்ரீவன் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.
''எதிரியின் தம்பி என்பதாலும் ராட்சசன் என்பதாலும் விபீஷணனை ஏற்றுக் கொள்ளக் கூடாது'' என்று ஜாம்பவானும் சுக்ரீவனும் வாதாடினர்.
''விபீஷணன் தர்மவான் மற்றும் ராமபக்தன் என்பதால் ஏற்றுக்கொள்ளலாம்'' என்று சிபாரிசு செய்தார் அனுமன்.
இறுதியில் ஸ்ரீராமர், ''சரணாகதி என்று என்னிடம் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வது என் விரதம், அது ராவணனாக இருந்தாலும் சரி'' என்று கூறி, விபீஷணனுக்கும் உடன் வந்த மற்றவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்துத் தன் அடியார்களாக ஆக்கிக் கொண்டார்.