ஒரு பாலைவனம்! எப்படியோ ஒரு பறவை அங்கு வந்து சிக்கிக் கொண்டது. அதற்கு வெளியேறவும் வழி தெரியவில்லை. பகலில் வெப்பத்தில் கருகி, இரவின் குளிர்ச்சியில் உறைந்து.. எப்படியோ உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தது.
ஒருநாள் ஒரு தேவதை அந்த வழியே சென்றது. பறவை, ''தேவதையே! எங்கே போகிறாய்?'' என்று கேட்டது. 'இறைவனைக் காண' என்று பதிலளித்தது தேவதை.
''என் நிலையைக் கூறி எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று கேட்டு வருவாயா?'' என்று மிகுந்த துயரத்துடன் கேட்டது.
பறவையைக் கண்டு பரிதாபப்பட்ட தேவதை அப்படியே செய்வதாக வாக்குறுதி அளித்தது.
தேவதை, இறைவனைக் கண்டவுடன் பறவையின் நிலையைப் பற்றிக் கூறி, 'அதற்கு எப்போது விடுதலை கிடைக்கும்' என்று கேட்டது. இறைவன் 'இன்னும் ஏழு ஜென்மங்கள் அது எடுக்க வேண்டும்' என்று கூறிவிட்டார்.
தேவதை, ''அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?'' எனக் கேட்டது. '' 'இறைவனே! உனக்கு நன்றி' என்று எப்போதும் ஜபித்துக் கொண்டிருக்கச் சொல்'' என்று இறைவன் கூறினார்.
தேவதை திரும்பி வரும்போது, காத்திருந்த பறவையிடம் மந்திரத்தைக் கூறி, 'ஜபித்து வா. ஏழு ஜன்மம் கடந்து உன் நிலைமை சீராகும் என்று பகவான் கூறினார்' என்றது.
நாட்கள் கடந்தன. தேவதை மீண்டும் அதே வழியில் இறைவனைக் காண வந்தது. என்ன ஆச்சரியம்! அங்கு ஒரு குளிர்ந்த அருவி வீழ்ந்து கொண்டிருந்தது. கனிகளுடன் கூடிய மரங்கள், பாடும் பறவைகள் என்று சூழ்நிலையே சொர்க்கமாக மாறியிருந்தது.
ஆச்சரியத்தில் வாயடைத்துப் போன தேவதை ஒன்றும் பேசாமல் அங்கிருந்து சென்றது.
இறைவனைத் தரிசித்தவுடன், ''பெருமானே பறவையின் வாழ்வு இப்படி வளம் பெறப் பல ஜென்மங்கள் ஆகும் என்று கூறினீர்களே! இது என்ன விந்தை?'' என்று கேட்டது.
இறைவன், ''அந்தப் பறவை தகிக்கும் வெப்பத்திலும், உயிரே உறையும்படி குளிரும் போதும், 'இறைவா, உனக்கு நன்றி' என்று ஜபித்தபடியே இருந்தது. எல்லாவற்றையும் நான் அளித்ததாகவே எண்ணி ஏற்றுக் கொண்டது. தனது ஜப மகிமையால் ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கிப் புது வாழ்வு பெற்றுவிட்டது'' என்று கூறினார் இறைவன்.