ராமசரண் ஒரு ராம பக்தர். அவர் தினமும் ராம நாமத்தை ஜபிப்பார்.
ஒரு நாள் அவர் வீட்டின் அருகே கிளிக்குஞ்சு ஒன்று வந்து விழுந்தது. அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்து வளர்த்து வந்தார்.
அதற்கு ராம நாமத்தையும் சொல்லிக் கொடுத்தார். கிளியும் அடிக்கடி ராம நாமத்தைச் சொல்லி வந்தது.
கிளி சில நேரம் ராமாயணத்தில் உள்ள சில விவரங்களைக் கேட்கும். ராமசரண் அதற்கு விளக்குவார்.
ஒரு நாள் ராமசரண் ஒரு ஞானியைச் சந்திக்கப் புறப்பட்டார்.
அப்போது கிளி அவரிடம், ‘‘அந்த ஞானியிடம் ராம நாமத்தை ஜபித்தால் நன்மை கிடைக்கும் என்கிறார்கள். நான் ராம நாமத்தைத் தினமும் ஜபிக்கிறேன். எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லையே, ஏன் என்று கேட்டு வாருங்கள்’’ என்றது.
ராமசரண் ஞானியைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு கிளி அவரிடம், ‘‘என் கேள்விக்கு ஞானி என்ன பதில் கூறினார்?’’ என்று கேட்டது.
ராமசரண்,‘‘கிளியே, உன் கேள்வியைக் கேட்டதும் ஞானி மௌனமானார்’’ என்றார்.
கிளி பதிலே கூறவில்லை. மறுநாள் அதிகாலையில் கூண்டிற்குள் இறந்து கிடந்தது. ராமசரண் மிகவும் துயரப்பட்டார்.
கிளியை எடுத்துச் சென்று மரப்பொந்தில் வைத்து மலர்களால் மூடி, கிளியின் ஆத்மா சாந்தியடைவதற்காக ஒரு ராம பாடலைப் பாடினார்.
உடனே கிளி பறந்து சென்று ஒரு மரக் கிளையில் அமர்ந்தது.
ராம சரண் மிகவும் கவலையோடு, ‘‘நீ இறந்தது போல நடித்து ஏன் என்னை ஏமாற்றினாய்?’’ என்று கேட்டார்.
‘‘சுவாமி, நான் உங்களை ஏமாற்றவில்லை. என் கேள்விக்கு எந்தப் பதிலும் கூறாமல் ஞானி மௌனமானார் என்று சொன்னீர்களே, அதன் தத்துவத்தை நான் புரிந்து கொண்டேன். ராம நாமத்தை வாய்விட்டுக் கூறினால் மட்டும் போதாது. ராம நாமத்தை ஆவி ஒடுங்கும் அளவிற்கு ஆத்மாவோடு கலக்க வேண்டும் என்பதுதான் அவர் கூறிய விளக்கம். அதை நான் கடைப்பிடித்து மயக்க நிலையில் இருந்தேன். நான் இறந்ததாக எண்ணி எனக்கு விடுதலை அளித்தீர்கள். ஆமாம், உங்களை ஒன்று கேட்கிறேன். ராம நாமத்தை ஜபிக்க வேண்டும் என்று எனக்குக் கூறிய உங்களுக்கு, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரவில்லையே?’’ என்று கூறியபடி கிளி பறந்து சென்றது.
ராமசரண் தன் அறியாமையை நினைத்து வெட்கப்பட்டார்.