ஒரு கருமி எதற்குமே செலவு செய்ய மாட்டான். எப்போதுமே அவன் பஞ்சப்பாட்டுதான் பாடுவான். அவனிடம் பணம், சொத்து நிறைய இருந்தும் எவரும் அவனிடம் செல்ல மாட்டார்கள்.
‘‘அட, அந்தக் கஞ்சனிடம் போனா ஒன்றும் தரமாட்டான். அவனிடம் கேட்பதற்குப் பதில் சுவரில் முட்டிக்கலாம்’’ என ஒதுங்கிப் போய்விடுவார்கள்.
அவன் காதுபடவே பலர் அவனைக் கருமி என்றார்கள். எப்படியாவது அப்பெயரை மாற்ற நினைத்தான்.
ஒரு பெரியவரிடத்தில் ஆலோசனை கேட்டான். கருமியைப் பற்றி அவருக்குத் தெரியும். என்றாலும் சொன்னார்:
‘‘சரி. இனி நீ ஊரில் உள்ளோரை எல்லாம் உன் வீட்டுக்குக் கூப்பிடு. நல்ல விருந்து வை. அவர்கள் திரும்பும்போது பட்டாடைகளும் பணமும் கொடு. எல்லோரும் மகிழ்ச்சியோடு தர்மப்பிரபு என்று அழைப்பார்கள்’’ என்றார்.
கருமிக்குச் செலவாகிறதே என்ற கவலை இருந்தாலும், தர்மப்பிரபு என்று எல்லாருமே இனி அழைப்பார்களே என்று மகிழ்ச்சி.
அனைவரையும் அழைத்துச் சிறப்பாக விருந்து வைத்தான். பட்டாடைகளும் பணமும் தந்தான். அவர்களும் மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள்.
அப்போது வெளியூரிலிருந்து சிலர் வந்து கொண்டிருந்தார்கள். ‘‘என்ன விசேஷம்? எல்லோரும் பட்டாடைகளோடு வருகிறீர்களே!’’ என்று கேட்டார்கள்.
விருந்துக்குப் போய் வந்தவர்கள், ‘‘ஒன்றுமில்லை. எங்க ஊர் கஞ்சன் வீட்டில் விருந்து. அவன்தான் இதைத் தந்தான்’’ என்றனர்.
அதை அக்கருமியும் கேட்டான். அட, இவ்வளவு செலவு செய்தும் நம் பெயர் மாறவில்லையே என்று வருத்தப்பட்டான்.