உஜ்ஜயினியில் விறகுவெட்டி ஒருவனுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் அவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நீண்ட காலமாக குழந்தை இல்லாமலிருந்ததால் அந்தக் குழந்தைக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தான்.
அவன் வளர்ந்து பெரியவனான பின்பும் உழைக்காமல் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் விறகு வெட்டிக்கு வயதாகிக் கொண்டேயிருந்தது. அவனுக்குத் தன் மகன் தன்னைப் போல் உழைப்பாளியாக இல்லாமல் இருக்கிறானே என்கிற வருத்தமிருந்தது.
ஒரு நாள் அவனை அழைத்து, “உனக்கோ இப்போது அன்னையில்லை, எனக்கும் வயதாகிக் கொண்டே இருக்கிறது. எனக்கும் உழைக்கும் சக்தி குறைந்து விட்டது. நீ உழைத்துப் பொருளீட்டி வந்தால் மட்டுமே உனக்கு வீட்டில் சாப்பாடு கிடைக்கும்” என்று கடுமையாகக் கூறினான்.
அதைக் கேட்ட மகன், நண்பர்களிடம் ஒரு ரூபாயைக் கடனாக வாங்கி வந்து தன் தந்தையிடம் கொடுத்து தான் உழைத்து வாங்கி வந்ததாகக் கூறினான்.
அதை வாங்கிய விறகு வியாபாரி,அடுப்பில் எறிந்தான். மறுநாளும் அதுபோல் நண்பர்களிடம் ஒரு ரூபாயைக் கடன் வாங்கிக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தான். அதையும் வாங்கிய விறகு வியாபாரி அடுப்பில் விட்டெறிந்தான்.
“நீ முதலில் உழைக்கக் கற்றுக் கொள்” என்றான் விறகுவெட்டி.
மூன்றாம் நாள் அவன் கஷ்டப்பட்டு உழைத்து அரைக்காசைக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தான்.
அதையும் விறகு வெட்டி வாங்கி அடுப்பில் எரிந்தான்.
ஆனால் அவனது மகன் அடுப்பில் கையை விட்டு அவன் உழைத்து வந்த அரைக்காசை மட்டும் எடுத்தான்.
அதைக் கண்ட அவன் தந்தை, “நீ உழைக்கக் கற்றுக் கொண்டாய். உழைப்பு உன்னை ஒரு நாள் இந்த ஊருக்கே ராசாவாக ஆக்கும்” என்றான்.
இப்படி அவன் உழைத்துக் கொண்டிருக்கையில் ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரத்துக்கு விறகு தூக்கிச் சுமக்க ஆள் தேவைப்பட்டது அறிந்து விறகு சுமந்து கொண்டு சென்றான்.
அதற்கு அவனுக்கு அரைக்காசு கிடைத்தது.
அந்தக் காசை அரண்மனை மதில் அருகே தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருந்தான்.
அதை மாடத்திலிருந்து பார்த்த அரசன் அவனைக் கூப்பிட்டு விசாரித்தான்.
அரசன் அவனுக்கு அரைக்காசுக்குப் பதிலாக ஒரு தங்க நாணயம் கொடுத்தான்.
தங்க நாணயத்தைப் பெற்றுக் கொண்டு வெளியில் வந்த அவன் மீண்டும் அந்த அரைக்காசைத் தேடத் தொடங்கினான்.
இதைப் பார்த்து எரிச்சலுற்ற அரசன் அவனை மீண்டும் கூப்பிட்டு அனுப்பினான்.
“நான்தான் உனக்கு அரைக்காசுக்குப் பதிலாக ஒரு தங்க நாணயம் கொடுத்து விட்டேனே. பின்னர் ஏன் மீண்டும் அந்த அரைக்காசைத் தேடிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான் அரசன்.
“மன்னா! நான் உழைத்துப் பெற்ற காசைக் காணாமல் போக விட எனக்கு மனதில்லை...” என்றான் அவன்.
இதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற மன்னன் அவன் உழைப்பையும், அவனுடைய விடாமுயற்சியையும் பாராட்டி அவன் கிராமத்திற்கு அவனைத் தலைவனாக்கினான்.
அன்றிலிருந்து மக்கள் அவனை அரைக்காசு அரசன் என்றுதான் அழைத்தனர்.
அவன் தந்தை சொல்படி அவன் உழைப்பு அவனை அவன் ஊருக்கே ராஜாவாக்கி விட்டது.