அரசன் ஒருவன் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தான். அங்கிருந்த கைதிகளில் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கேட்டான்.
முதல் கைதி, “அரசே! நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என்னைத் தவறுதலாகச் சிறையில் அடைத்து விட்டனர். தாங்கள்தான் அருள்கூர்ந்து என்னை விடுவிக்க வேண்டும்” என்றான்.
அடுத்த கைதி, “அரசே! எனக்கும் நீதிபதிக்கும் தகராறு. அதனால் அவர் எனக்குச் சிறைத் தண்டனை அளித்து விட்டார். நான் எந்தப் பாவமும் அறியாதவன்” என்றான்.
இப்படியே ஒவ்வொரு கைதியும் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் நல்லவர்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அரசனும் பொறுமையாக அனைவரது முறையீட்டையும் கேட்டுக் கொண்டே வந்தான்.
கடைசியாக ஒரு கைதி மட்டும், “அரசே! இந்தக் கைகளால் நான் திருடினேன். அதற்காகத்தான் நான் சிறைத் தண்டனை அனுபவிக்கிறேன்.” என்றான்.
இதைக் கேட்டதும் அரசன் கடுங்கோபம் கொண்டான்.
அவன் சிறைக் காவலர்களைப் பார்த்து, “நல்லவர்கள் மட்டும் இருக்கக் கூடிய இந்தச் சிறைச்சாலையில் இந்தத் திருடனைக் கொண்டு வந்து சேர்த்தது யார்? இவன் இங்கிருந்தால் இங்கிருக்கும் அனைவரையும் திருடர்களாக்கி விடுவான். இவனை உடனே வெளியே விரட்டி விடுங்கள்” என்று கத்தினான்.
அரசனின் குறிப்பை உணர்ந்த காவலர்கள் உண்மையைச் சொன்ன அந்தக் கைதியை மட்டும் விடுவித்தனர்.