ஒரு சமயம் புலவர்கள் பலர் கூடிய போது எது பெரியது? என்பது பற்றி உரையாடினார்.
“உலகம்தான் பெரியது என்றார்” ஒருவர்.
“அரசன் தான் பெரியவர்” என்றார் மற்றொருவர்
“இறைவனே பெரியவர்” என்றார் இன்னொருவர்.
அப்போது அங்கு அவ்வையார் வந்தார்.
அவர் சிரித்தபடி “எது பெரியது” என்பதற்கு விளக்கம் நான் தருகிறேன் என்றார்.
“பெரியது என்றால் இந்த உலகம்தான். ஆனால் இந்த உலகத்தைப் படைத்தவர் நான் முகன். படைப்பை விட படைத்தவர் பெரியவராக இருக்க வேண்டும். ஆகவே நான்முகன் பெரியவர். நான்முகப் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றியவர். ஆகவே நான்முகனை விட திருமால் பெரியவர்.
திருமால் அலைகடலில் படுத்துறங்குகிறார். ஆகவே கடல் அவரை விடப் பெரியது. அந்தக் கடலையே குறுமுனியான அகத்தியர் குடித்தார். ஆகவே கடலை விட அகத்தியர் பெரியவர். ஆனால் அகத்தியரோ கலசத்திலிருந்து பிறந்தவர். ஆகவே அவரை விடக் கலசம் பெரியது. அந்தக் கலசம் இந்தப் பூமியிலிருந்து தோன்றியது. ஆகவே பூமி பெரியது.
இந்தப் பூமியை ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷனாகிய பாம்பு தன் ஒரு தலையால் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே அந்த பாம்பு பூமியை விடப் பெரியது. ஆதிசேஷனாகிய பாம்பை உமையவள் தன் சிறு விரலில் மோதிரமாக அணிந்திருக்கிறார். ஆகவே உமையவள் எல்லோரையும் விடப் பெரியவர்.
உமையவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கிறார். ஆகவே சிவபெருமான் அவரை விடப் பெரியவர். ஆனால் சிவபெருமானோ தொண்டர் உள்ளத்தில் இருக்கிறார். ஆகவே எல்லோரையும் விடப் பெரியவர்கள் அடியவர்கள்தாம். தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே.” என்றார்.
அதனைப் புலவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.