பார்வையில்லாதவர்கள் சிலர் யானை ஒன்றைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற, பார்வை தெரிந்தவன் ஒருவன் அவர்களை யானையின் அருகில் அழைத்துச் சென்றான்.
பார்வையற்றவர்களில் ஒருவன் யானையின் காலைத் தொட்டுப் பார்த்து, “யானை தூணைப் போல் இருக்கிறது” என்றான்.
இன்னொருவன் யானையின் தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்து, “யானை உலக்கையைப் போல் இருக்கிறது” என்றான்.
மூன்றாமவன் யானையின் வயிற்றைத் தொட்டுப் பார்த்து, “யானை பெரிய ஜாடியைப் போல் இருக்கிறது” என்றான்.
நான்காமவனோ யானையின் காதைத் தொட்டுப் பார்த்து, “யானை முறத்தைப் போல இருக்கிறது” என்றான்.
இப்படி அவர்கள் யானையின் உருவத்தைப் பற்றி பலவாறாகக் கருத்து சொன்னார்கள்.
அப்போது அவர்களை யானையிடம் அழைத்து வந்தவர், “உங்களில் யாரும் யானையைப் பார்க்கவில்லை. யானை தூணைப் போல் இல்லை. அதன் கால்கள் தூணைப் போல் இருக்கின்றன. அது பெரிய ஜாடியைப் போன்று இல்லை. அதன் வயிறுதான் அப்படியிருக்கிறது. அது போல் யானை முறத்தைப் போலும் இல்லை. அதன் காதுதான் அப்படியிருக்கிறது. யானை உலக்கையைப் போலும் இல்லை. அதனுடைய தும்பிக்கைதான் அப்படியிருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்த உருவம்தான் யானை.” என்று சொன்னார்.
ஆனால் யானையிடம் அழைத்து வந்தவர் சொன்ன உண்மையை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
இப்படித்தான் பலரும் தங்கள் அறியாமையால் உண்மையை நம்புவதில்லை...