ஞானி ஒருவர் அந்த நாட்டுக்கு வருகை புரிந்தார். அந்த நாட்டு மன்னர் அவரைச் சிறப்புடன் வரவேற்றார்.
மன்னரின் வரவேற்புகளையும், விருந்தோம்பல்களையும் ஏற்றுக் கொண்ட ஞானி கடைசியில் அங்கிருந்து விடை பெற்றார்.
அவர் விடைபெறும் போது மன்னரிடம், “இனிப்பாக இருந்தால் விழுங்கி விடும்; கசப்பாக இருந்தால் உமிழ்ந்து விடும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ஞானி சொன்ன வாக்கியங்களின் பொருள் மன்னருக்குப் புரியவில்லை.
அங்கிருந்த அமைச்சர்களிடம் ஞானி சொன்ன வாக்கியங்களுக்கான பொருள் சொல்லும்படி கேட்டார்.
அமைச்சர்கள் யாருக்கும் அந்த வாக்கியங்களுக்கான பொருள் தெரியவில்லை.
இதனால் கோபமடைந்த மன்னர், “இந்த வாக்கியங்களுக்கான பொருள் சொல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஒரு மாத காலத்திற்குள் இதற்கான பொருளும் விளக்கமும் சொல்லாவிடில் உங்கள் அனைவருக்கும் மரண தண்டனை அளிப்பேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
நாட்கள் கடந்தன. ஒரு மாதம் காலம் முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தது.
மன்னருக்குப் பதில் சொல்ல முடியாத கவலையில் மூத்த அமைச்சர் ஒருவர் படுத்த படுக்கையாகி விட்டார்.
மறுநாள் பதில் சொல்ல முடியா விட்டால் மரணம் நிச்சயம்.
அமைச்சரின் கவலையைக் கண்ட அவரது மனைவி அவரிடம், “கவலைப்படாதீர்கள்! தங்களுக்கு ஒன்றும் ஆபத்து வராது. நாளை காலை யாராவது அந்த வாக்கியங்களுக்குச் சரியான பொருளைச் சொல்லி விடுவார்கள்” என்று ஆறுதல் சொன்னார்.
இதைக் கண்ட அமைச்சரின் மகன், “தந்தையே கவலைப்படாதீர்கள். தங்களிடம் மன்னர் கேட்ட கேள்வியை என்னிடம் ஒரு முறை சொல்லுங்கள்.” என்றான்.
அவர் ஞானி வந்த கதையையும், கடைசியில் ஞானி மன்னரிடம் சொல்லிவிட்டுச் சென்ற இரு வாக்கியங்களையும் சொன்னான்.
உடனே அமைச்சரின் மகன், “தந்தையே, நீங்கள் கவலையடையாமல் தூங்குங்கள். நாளை காலை அரசவைக்குச் சென்று இந்தக் கேள்விக்கான பதிலை நானே கூறிவிடுகிறேன்” என்றான்.
மறுநாள் அமைச்சரின் மகன் அரசவைக்குச் சென்றான்.
அங்கு மன்னரிடம், “மன்னரே, வணக்கம். நான் தங்கள் அரசவையின் மூத்த அமைச்சரின் மகன். நான் தங்களுக்கு ஞானி சொல்லிவிட்டுச் சென்ற இரண்டு வாக்கியங்களுக்கான பொருளைச் சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்” என்றான்.
மன்னர், “உன் தந்தை வராமல் உன்னை அனுப்பியது ஏன் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.
“அவருக்கு உடல்நிலை சரியில்லை. இந்த சாதாரணமான வாக்கியங்களுக்கு நானே விளக்கம் அளிக்கிறேன்” என்றான்.
“சிறுவனே, இந்த வாக்கியத்துக்குச் சரியான பொருள் சொல்லாவிட்டால் உனக்கு மரண தண்டனை கிடைக்கும்”
“சரியான விளக்கமளித்து விட்டால்...”
“நீ கேட்பது கொடுக்கப்படும்”
“அப்படியானால் சரி, ஞானி உங்களிடம் சொல்லிச் சென்ற வாக்கியங்களைக் கூறுங்கள்” என்றான் சிறுவன்.
“இனிப்பாக இருந்தால் விழுங்கி விடும்; கசப்பாக இருந்தால் உமிழ்ந்து விடும்.” என்றார் மன்னர்.
“இது மன்னர்களுக்குக் கொடுக்கப்பட்ட மகத்தான அறிவுரை. ஒரு மன்னன் மக்களிடம் எப்போதும் இனிமையாகவே பழகிக் கொண்டிருந்தால் அவனைக் கோழையாகக் கருதி மக்கள் மன்னரை மதிக்க மாட்டார்கள். அவனது அரச பதவியைக் கூட அபகரித்துக் கொள்வார்கள். இதுபோல் ஒரு மன்னன் கசப்பாகவே நடந்து கொண்டிருந்தாலும் மக்கள் அவனை அப்பதவியிலிருந்து தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால் அன்பைக் காட்டித் தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டித்து ஆட்சி செலுத்துபவனே சிறந்த மன்னன் என்று மதிக்கப்படுவான்” என்றான் அந்தச் சிறுவன்.
மன்னரும் அந்தச் சிறுவன் வேண்டிய பரிசுகளைக் கொடுத்து அனுப்பினார்.