ஒரு ஆசிரமத்தில் முனிவர் தவம் புரிந்து வந்தார்.
அவருடைய அமைதியான குணம், உண்மை வாக்கு, அன்பு நிறைந்த உள்ளம், உதவி புரியும் எண்ணம் போன்றவைகளால் அவருடைய சிறப்பு வளர்ந்து கொண்டிருந்தது.
இவருடைய தவ வலிமையைச் சோதிக்க எண்ணிய இந்திரன் சாதாரணமான போர் வீரன் உருவில் அங்கு வந்தான்.
அவன் முனிவரிடம் சென்று, “சுவாமி! இந்த ஆசிரமத்துக்கு வந்ததும் என் போர்க் குணம் மறைந்து விட்டது. இந்தப் போர் வாளை நான் இங்கு விட்டுச் செல்கிறேன். அருகிலுள்ள ஊரிலிருக்கும் என் பெற்றோரிடம் விடை பெற்றுக் கொண்டு வந்து தங்களின் சீடனாகப் பணியாற்ற விரும்புகிறேன். என் பெற்றோரின் ஆசியைப் பெற்று வந்த பின்பு இந்த வாளை எனக்குப் பணி வழங்கிய மன்னனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தங்களிடம் சீடனாக முழுமையாகப் பணியாற்றுவேன். என் பெற்றோரிடம் ஆசி பெற்று வரும் வரை இந்த வாள் தங்களிடமே இருக்கட்டும்” என்று கூறிவிட்டுச் சென்றான்.
முனிவரும் அந்த வாளை வாங்கி வைத்துக் கொண்டார்.
நாட்கள் கடந்தன. முனிவருக்குத் தினமும் அந்த வாளின் நினைவே கண் முன் வந்து நின்றது.
அவருக்குத் தியானம், யோகம் எதிலும் மனம் செல்லவில்லை.
முனிவர் அடிக்கடி அந்த வாள் இருக்கும் இடத்திற்கு வந்து, உறையிலிருந்து வாளை வெளியே எடுப்பதும், பின்னர் அதைச் சுழற்றிப் பார்ப்பதுமாக இருந்தார்.
இதைப் பார்த்த சீடர்கள் அவரருகில் வரப் பயப்பட்டனர். ஆசிரமத்தில் வளர்ந்து வந்த பறவைகளும், விலங்குகளும் கூட அவரைக் கண்டு பயந்து ஒதுங்கின.
ஒரு நாள் இந்திரன் அவர் முன் தோன்றி, “முனிவரே, தங்களிடம் வாள் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போன போர்வீரன் நான்தான். உலகியல் கருவிகளும், பொருள்களும் தவத்திற்கு ஊறுவிளைப்பவை என்பதைத் தாங்கள் அறிந்திருந்த போதும், அதை உணராமல் இருந்ததால் தங்களைக் கண்டு இங்கிருப்பவர்கள் அனைவரும் தங்களிடமுள்ள நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டும் அதை நீங்கள் உணரவில்லை. தங்கள் தவம் முழுமையடையவிலை” என்றான்.
அப்போதுதான் முனிவருக்குத் தான் செய்த தவறு தெரிந்தது.