அக்பர் அரசாண்ட காலத்தில் அருகிலுள்ள காடொன்றில் சாது ஒருவர் குடிசை போட்டு அங்கு வசித்து வந்தார். அப்பகுதி மக்கள், அவரைத் தேடிச் சென்று ஆசி பெற்று வருவதுண்டு. ஆனால் அவரிடம் பொருள்கள் எதுவுமில்லாது இருந்ததால், வந்தவர்களை உபசரிப்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது.
இந்தக் குறையைப் போக்க அரசர் அக்பரிடம் சென்று சிறிது பணத்தைப் பெற்று வர வேண்டுமென்று விரும்பினார் அந்த சாது.
இதற்காக அந்த சாது அரசவைக்குச் சென்றார்.
அங்கு அரசர் அக்பர் தொழுது கொண்டிருந்தார். சாது அவரருகே அமர்ந்து கொண்டார்.
அவர் தொழுகையின் போது, “இறைவனே! எனக்கு இன்னும் பொன், பொருள், ராஜ்யம் போன்றவைகளைக் கொடுத்தருள வேண்டும்” என்று வேண்டினார்.
இதைக் கேட்ட சாது அங்கிருந்து எழுந்தார்.
சாது எழுந்து செல்வதைப் பார்த்த அக்பர், அவரைக் கூப்பிட்டு அமரச் சொன்னார்.
சாது அங்கே மீண்டும் அமர்ந்தார்.
தொழுகை முடிந்ததும், அக்பர் அந்த பக்கிரியைப் பார்த்து, “தாங்கள் என்னைக் காண வந்தீர்கள். ஆனால் என்னிடம் எதையும் சொல்லாமல் திரும்பிச் செல்ல நினைத்தீர்களே?” என்றார்.
சாது, “நான் என்னைத் தேடி வரும் மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டுமென்று விரும்பினேன். அதற்குத் தேவையான பணத்தை உங்களிடம் கேட்டுப் பெறலாமென வந்தேன். ஆனால் தங்களை கஷ்டப்படுத்த வேண்டாமென்று நினைத்துக் கிளம்பினேன். அதற்குள் தாங்கள் அமரச் சொல்லி விட்டீர்கள்” என்றார்.
“அதனால் என்ன, இப்போது தங்களுக்குப் பணம் அளிக்கிறேன்” என்றபடி அருகிலிருந்த அரண்மனைக் காவலரை அழைத்தார்.
“அரசே எனக்குப் பணம் எதுவும் வேண்டாம். தாங்கள் தொழுகையின் போது இறைவனிடம் பொன், பொருள், பணம் வேண்டி யாசித்தீர்கள். எனவே யாசகனான தங்களிடம் நான் ஏன் யாசிக்க வேண்டும்? யாசகம் வாங்காமல் இந்த செயலைச் செய்ய முடியாதெனும் நிலையில் நானும் இறைவனிடமே யாசித்துக் கொள்ளலாமென்றுதான் திரும்பினேன்” என்றார்.